» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நிலத் தகராறில் துப்பாக்கி முனையில் மிரட்டல்: குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தி கட்டிடம் இடிப்பு!

ஞாயிறு 26, ஜூலை 2026 1:26:09 PM (IST)

tutghadmit.jpg

தூத்துக்குடி மடத்தூர் பகுதியில் நிலத்தைக் கைப்பற்றும் நோக்கில், குடும்பத்தினர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி, ஜே.சி.பி இயந்திரம் மூலம் கட்டிடத்தை இடித்துத் தள்ளிய சம்பவமும், துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்த நிகழ்வும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மடத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபாண்டியனுக்குச் சொந்தமான 30 சென்ட் நிலத்தை அவரது மகன் லிங்ககுமார் பராமரித்து, கடைகள் கட்டி வருகிறார். இந்த நிலத்தின் மதிப்பு சுமார் 1.5 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. முன்னதாக, இந்த நிலத்தைக் கோவில்பட்டியைச் சேர்ந்த துளசி அம்மாள் என்பவர் போலியாகப் பத்திரப்பதிவு செய்ய முயன்ற நிலையில், தூத்துக்குடி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ஜெயபாண்டியனுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தது. 

இருப்பினும், அந்த இடத்தை மீண்டும் சிலருக்குப் போலிப் பத்திரம் செய்து கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பிரையன்ட் நகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் மற்றும் மனோகர் ஆகியோரின் ஆதரவாளர்களான தவெக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜேசுதாஸ், வழக்கறிஞர் சேசு உள்ளிட்ட சிலர், மடத்தூரில் உள்ள லிங்ககுமாரின் இடத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். ஜே.சி.பி இயந்திரம் மூலம் அங்கு அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தை இடித்துத் தள்ளியுள்ளனர்.

இதனைத் த தடுக்க முயன்ற லிங்ககுமார், அவரது மனைவி மகாலட்சுமி, கல்லூரி மாணவியான மகள் சுஜிதா மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மகன் ஜெயக்குமார் ஆகியோரை அக்குழுவினர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், அக்குடும்பத்தினரைத் துப்பாக்கி முனையில் மிரட்டிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இத்தாக்குதலில் காயமடைந்த லிங்ககுமார், மகாலட்சுமி, சுஜிதா மற்றும் ஜெயக்குமார் ஆகிய நால்வரும் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துச் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் காவல்துறையினர் காலம் தாழ்த்தி வருவதாகப் பாதிக்கப்பட்ட லிங்ககுமார் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், துப்பாக்கி முனையில் மிரட்டியது குறித்துத் தெரிவித்தபோது, அதை 'டம்மி துப்பாக்கியாக இருக்கும்' என்று காவல்துறையினர் அலட்சியமாகப் பதிலளித்ததாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory