» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓமனில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் மனைவிக்கு அரசு வேலை: அமைச்சர் ஸ்ரீநாத் நடவடிக்கை!

ஞாயிறு 21, ஜூன் 2026 1:09:22 PM (IST)



ஓமன் நாட்டில் கப்பலில் பணியாற்றியபோது உயிரிழந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மாலுமி நிஷாந்தின் மனைவிக்கு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தில் தற்காலிக இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி குரூஸ்புரத்தைச் சேர்ந்தவர் மாலுமி நிஷாந்த். இவர் ஓமன் கார்மோஸ் கடற்பரப்பில் உள்ள கப்பல் ஒன்றில் பணியாற்றி வந்தபோது, அத்தியாவசிய மற்றும் அவசர மருத்துவ உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கப்பலிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நிஷாந்தின் உடல் இதுவரை தமிழகத்திற்கு வந்து சேராத நிலையில், அவரது மனைவி சராபின் தனது பத்து மாத ஆண் குழந்தை மற்றும் மூன்று வயது பெண் குழந்தையுடன் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தார். தங்களது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தனக்கு ஏதேனும் ஒரு அரசுப் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம் ஜூன் 19-ஆம் தேதி சராபின் கோரிக்கை மனு அளித்திருந்தார்.

அவரது மனுவை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ஸ்ரீநாத், உடனடியாக அதனைப் பரிசீலனை செய்யப் பரிந்துரைத்தார். அந்தப் பரிந்துரையின் அடிப்படையில், சராபின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் கருணை அடிப்படையில் மனு உடனடியாகப் பரிசீலிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சராபினுக்குத் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் தூத்துக்குடி மேலாளர் அலுவலகத்தில் வெளிமுகமை நிறுவனம் (Outsourcing) வழியாகத் தொகுப்பு ஊதிய அடிப்படையில், தற்காலிக இளநிலை உதவியாளர் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவைத் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் விஜயகார்த்திகேயன் ஜூன் 20-ஆம் தேதி சனிக்கிழமை வெளியிட்டுள்ளார். அமைச்சரின் இந்தப் பரிந்துரையும், நிர்வாகத்தின் அதிவிரைவான இந்த மனிதநேய நடவடிக்கையும் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பத்தினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory