» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பற்றாக்குறை? மாணவர்களுக்கு பிஸ்கட் வழங்கியதாகப் புகார்!

ஞாயிறு 21, ஜூன் 2026 1:04:37 PM (IST)

விளாத்திகுளம் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் ஏற்பட்ட திடீர் உணவுப் பற்றாக்குறை காரணமாக, 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பிஸ்கட் வழங்கப்பட்டதா புகார் எழுந்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அரசின் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இந்தப் பள்ளியில் பயிலும் 250-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தினமும் காலையில் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்குக் காலை உணவு விநியோகம் செய்யப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக உணவில் திடீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், சுமார் 40 மாணவர்களுக்குக் காலை உணவு கிடைக்காத சூழ்நிலை உருவானது. நீண்ட நேரமாகக் காத்திருந்த அந்த 40 மாணவர்களும் கடுமையான பசியால் தவித்துள்ளனர்.

மாணவர்கள் பசியால் தவிப்பதைக் கண்ட பள்ளி ஆசிரியர்கள், உடனடியாக மாற்று ஏற்பாடாக அவர்களுக்குப் பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கி வழங்கியதாகக் கூறப்படுகிறது. பள்ளிப் பருவக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான காலை உணவுக்குப் பதிலாக பிஸ்கட் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தச் சம்பவம் கல்வி வட்டாரத்திலும் பெற்றோர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் காலையில் பசியோடு கல்வி கற்கக் கூடாது என்ற உயரிய நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த முக்கியத்துவமிக்க திட்டத்தில், நிர்வாகத் துறையினர் தகுந்த திட்டமிடல் இன்றி அலட்சியமாகச் செயல்படுகிறார்களா என மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். 

மேலும், இனிவரும் காலங்களில் இது போன்ற உணவுப் பற்றாக்குறை தட்டுப்பாடுகள் ஏற்படாமல், அனைத்து மாணவர்களுக்கும் தடையின்றித் தரமான உணவு கிடைப்பதை மாவட்ட நிர்வாகமும் கல்வித் துறையும் உறுதி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory