» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: பெண் பலி; 28 பேர் படுகாயம்!

ஞாயிறு 21, ஜூன் 2026 9:38:46 AM (IST)

எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பெண் உயிரிழந்தார். மேலும் 28 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எட்டக்காப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டம் மேலக்கரந்தை அருகே உள்ள ராசாபட்டியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் புதிதாகத் திறக்கப்பட்டு இயங்கி வந்தது.

நேற்று காலை வழக்கம்போல் இந்த ஆலையில் பட்டாசு உற்பத்தித் தொழில்கள் தொடங்கின. இதற்காகச் சிவகாசியைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பேருந்துகள் மூலம் வேலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். மாலை சுமார் 5.30 மணியளவில், ஆலையின் மருந்து கலவை அறையில் எதிர்பாராத விதமாகப் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

வெடி சத்தம் கேட்டு, ஆலை அறைகளில் இருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து நாலாபுறமும் சிதறி ஓடி உயிர் தப்பினர். எனினும், பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறிய கோர விபத்தில் ஆலையின் 4 உற்பத்தி அறைகளும் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகிச் சேதமடைந்தன.

விபத்து குறித்துத் தகவல் அறிந்த மாசார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் உடனடியாகக் கொண்டு வரப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.

ஆலை இடிபாடுகளில் சிக்கியதில், சாத்தூர் அருகே உள்ள நத்தத்துப்பட்டியைச் சேர்ந்த வெள்ளையப்பன் மனைவி மாரியம்மாள் (48) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், அப்பையநாயக்கன்பட்டி நாராயணசாமி மனைவி முனியம்மாள் (50), ராஜேந்திரன் மனைவி பாக்கியலட்சுமி (46), நத்தத்துப்பட்டி பாண்டி மகன் மாரிமுத்து, அழகுபெருமாள் மனைவி வாழவந்தாள் (40), ராஜேந்திரன் மனைவி சாந்தி (53), பெருமாள் மனைவி ராமு (58), காசிலிங்கபுரம் சங்கிலி மகன் தங்கபாண்டி, சின்னவநாயக்கன்பட்டி காளிமுத்து மகன் ராமர் உட்பட 28 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் முதலுதவி மற்றும் சிகிச்சைக்காகச் சாத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுள் பலத்த காயமடைந்த 3 பேர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்து எட்டயபுரம் வட்டாட்சியர் சுபா, துணை போலீஸ் சூப்பிரண்டான சுந்தரபாண்டியன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விபத்து நேரிட்ட விதம் குறித்துப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இவ்விபத்து குறித்து மாசார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விளைநிலங்களுக்கு அருகே பட்டாசு ஆலைகளுக்குப் புதிய அனுமதி வழங்கக் கூடாது என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் சூழ்நிலையில், தற்போது எட்டயபுரம் அருகே புதிதாகத் தொடங்கப்பட்ட பட்டாசு ஆலையிலேயே வெடி விபத்து ஏற்பட்டுள்ளது சுற்றியுள்ள கிராம மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory