» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் ரூ.18 கோடியில் புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் ஆய்வு

ஞாயிறு 21, ஜூன் 2026 9:08:48 AM (IST)



திருச்செந்தூரில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகர்ப் பேருந்து நிலைய முதற்கட்டப் பணிகளைத் தமிழக மீன்வளம் - மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, புதிய நவீன புறநகர்ப் பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன.

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ. 18 கோடி மதிப்பீட்டில் இந்தப் புதிய புறநகர்ப் பேருந்து நிலையம் கட்டப்படவுள்ளது. திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலையில், நகராட்சியின் 1-ஆவது வார்டுக்கு உட்பட்ட சுமார் 3.90 ஏக்கர் நிலப்பரப்பில் இதற்கான கட்டுமானப் பணிகள் ஒதுக்கப்பட்டு, தற்போது முதற்கட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ள நிலையைத் தொடர்ந்து, தமிழக மீன்வளம் - மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் நேற்று சனிக்கிழமை கட்டுமானப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பணிகளின் தற்போதைய தரம் மற்றும் முன்னேற்றம் குறித்துப் பார்வையிட்ட அவர், நகராட்சி ஆணையர் ஈழவேந்தனிடம் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், திட்ட வரைபடம் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், இத்திட்டம் தொடர்பாகப் பொதுமக்களிடம் முறையான கருத்துகள் கேட்கப்பட்டதா என்பது குறித்தும் ஆணையரிடம் விவாதித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஸ்ரீநாத், "புதிய பேருந்து நிலையம் அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியருடன் விரிவாக ஆலோசனை செய்யப்படவுள்ளது. அதன் பின்னர், மக்களிடம் முழுமையாகக் கருத்து கேட்டு, அவர்களின் விருப்பத்தின்படிதான் அடுத்தகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெறும்" என்று உறுதிபடத் தெரிவித்தார். இந்த ஆய்வுக்குப் பின், அமைச்சர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

இந்த ஆய்வின் போது, நகராட்சிப் பொறியாளர் சரவணன், பணி மேற்பார்வையாளர் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் உடனிருந்து திட்ட விபரங்களை விளக்கினர். மேலும் தவெக மாவட்டச் செயலாளர் பிரைட்டர், நகரச் செயலாளர்கள் முருகானந்தம் (திருச்செந்தூர்), நிவாஸ் கண்ணன் (ஆறுமுகனேரி), மாவட்ட அமைப்பாளர் மபத்லால், வழக்கறிஞர் ரவிச்சந்திரன், வினோத், மந்திரமூர்த்தி, முத்துக்குமார், வெங்கடேஷ் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

V சுடலை கந்தசாமிJun 22, 2026 - 09:44:42 PM | Posted IP 162.1*****

திருச்செந்துர இருந்து குலசை மற்றும் ஆறுமுகமங்கலம் அதிக பேருந்து வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory