» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிஎஸ்ஆர் நிதியுடன் 1000 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம்: விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:52:17 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெரு நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதி உதவியுடன் பண்ணைக்குட்டைகள் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்..
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெரு நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதி (CSR நிதி) உதவியுடன், விவசாயிகளின் நிலங்களில் முழு மானியத்தில் 1000 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இது குறித்துத் ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய மானாவாரி வட்டாரங்களான கோவில்பட்டி, கயத்தாறு, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் புதூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகளின் நிலங்களில் இலவசமாகப் பண்ணைக்குட்டைகள் அமைத்துத் தரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதிகளில் சுமார் 1,45,000 ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளம், பருத்தி, சிறுதானியங்கள், வெங்காயம், மிளகாய், எண்ணெய் வித்துக்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
பயிர் சாகுபடி பரப்பு அதிகமாக இருந்தபோதிலும், பருவமழை மாறுபாடு காரணமாக இப்பகுதிகளில் வேளாண் உற்பத்தித்திறன் குறைவாகவே உள்ளது. எனவே, பருவமழைக் காலத்தில் பெய்யும் மழைநீரை அந்தந்த விவசாய நிலங்களிலேயே சேகரித்து, பயிர் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக இந்த இலவச பண்ணைக்குட்டைகள் அமைத்துத் தரப்படுகின்றன.
மண்ணின் தன்மைக்கேற்ப அளவுகள்
விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப: 15மீ × 15மீ × 2மீ, 18மீ × 18மீ × 2மீ, 20மீ × 20மீ × 2மீ ஆகிய அளவுகளில், சிறிய மற்றும் பெரிய பண்ணைக்குட்டைகள் மண்ணின் தன்மைக்கு ஏற்ப இலவசமாக அமைத்துத் தரப்படும். மழைக்காலங்களில் வீணாகும் நீர் இதில் சேகரிக்கப்படுவதால், பயிரின் விதை முளைப்பு, பூக்கும் தருணம் மற்றும் காய்க்கும் தருணம் போன்ற அத்தியாவசியக் காலங்களில் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற முடியும். மேலும், தண்ணீர் உள்ள சமயங்களில் பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்த்தும் விவசாயிகள் கூடுதல் லாபம் ஈட்டலாம்.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை ஐந்து வட்டாரங்களிலும் மொத்தம் 215 விவசாயிகளின் நிலங்களில் இலவசமாகப் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. வறட்சியிலும் புரட்சி செய்யக் கூடிய இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, மானாவாரி வட்டார விவசாயிகள் தங்களது வருமானத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
பண்ணைக்குட்டைகள் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள், அந்தந்த வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்களை நேரில் அணுகலாம். அல்லது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கைபேசி எண் 9629914199-ஐ தொடர்பு கொண்டும் தங்களது விருப்பத்தைப் பதிவு செய்யலாம். விருப்பம் தெரிவிக்கும் விவசாயிகளின் நிலங்கள் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு, உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குட்டைகள் வெட்டப்படும். பருவமழை தொடங்குவதற்கு முன்பாக இப்பணிகளை முடிக்க வேண்டியது அத்தியாவசியமாக உள்ளதால், விவசாயிகள் உடனடியாகத் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் : நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு அறிவிப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:34:49 PM (IST)

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையப் போலீசாருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:34:29 PM (IST)

மினி ஜவுளிப் பூங்கா கட்டுமானப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
செவ்வாய் 23, ஜூன் 2026 5:14:47 PM (IST)

ஒருங்கிணைந்த சேவை மையங்களில் வேலைவாய்ப்பு: ஜூலை 10-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 23, ஜூன் 2026 4:54:39 PM (IST)

அரசு பணித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா
செவ்வாய் 23, ஜூன் 2026 4:42:06 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் போக்குவரத்து விதிமுறை குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி
செவ்வாய் 23, ஜூன் 2026 4:40:07 PM (IST)








