» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயற்சி: வழக்கறிஞர் கைது!

சனி 2, மே 2026 8:35:58 AM (IST)

குரும்பூரில் சொத்தைப் பிரித்துக் கொடுத்தால்தான் மாமனாரின் உடலை அடக்கம் செய்ய விடுவேன் என்று தகராறு செய்த வழக்கறிஞர், காவல் நிலையத்தில் தனது மகனுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே அங்கமங்கலம் கோட்டார்விளையைச் சேர்ந்தவர் பெரியசாமி (91). இவருக்கு அம்பிகா, உமாபதி, இந்துமதி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் பெரியசாமியின் மனைவி காலமான நிலையில், அவர் ராதாபுரத்தில் உள்ள தனது மூன்றாவது மகள் இந்துமதி வீட்டில் வசித்து வந்தார். கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி உடல்நலக்குறைவால் பெரியசாமி காலமானார்.

பெரியசாமியின் உடல் அடக்கத்திற்காக கடந்த வியாழக்கிழமை அங்கமங்கலத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அப்போது அவரது இரண்டாவது மகளான உமாபதியின் கணவர், வழக்கறிஞர் டேவிட் கணேசன் (45), சொத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்றும், அதுவரை உடலை அடக்கம் செய்ய விடமாட்டேன் என்றும் கூறி தகராறில் ஈடுபட்டார். ஊர் மக்கள் சமாதானம் செய்தும் அவர் உடன்படாததால், உறவினர்கள் உடலை ஒப்படைக்க மறுத்தனர்.

இது குறித்துப் புகார் அளிக்க நேற்று குரும்பூர் காவல் நிலையத்திற்கு வந்த டேவிட் கணேசன், திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யைத் தன் மீதும், தனது மகன் அஸ்வந்த் (17) மீதும் ஊற்றித் தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த காவல் ஆய்வாளர் இளங்கோ மற்றும் போலீசார் உடனடியாக அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி இருவரையும் மீட்டனர்.

தற்கொலைக்கு முயன்ற வழக்கறிஞர் டேவிட் கணேசன் மற்றும் அவரது மகன் அஸ்வந்த் ஆகிய இருவர் மீதும் குரும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். சொத்து தகராறுக்காகத் தந்தையின் உடலை வைத்து மருமகனே காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory