» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தவெக வேட்பாளர் - திமுகவினர் திடீர் மோதல்: வாக்குச்சாவடி அருகே பரபரப்பு!

வியாழன் 23, ஏப்ரல் 2026 10:27:04 AM (IST)



தூத்துக்குடியில் வாக்குச்சாவடி அருகே தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியிலும் காலை 7 மணி முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி 42-வது வார்டுக்கு உட்பட்ட சிவந்தி ஆதித்தனார் பள்ளி வாக்குச்சாவடி அருகே, தாமோதரன் நகர் மெயின் ரோட்டில் திமுக பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான கோட்டுராஜா தலைமையில் திமுகவினர் நின்றுகொண்டு வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அந்த வழியாக தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் நடிகர் ஸ்ரீநாத், மத்திய மாவட்ட செயலாளர் எஸ்டிஆர் சாமுவேல்ராஜ், கிஷோர் மற்றும் கோல்டன் ஆகியோர் மூன்று கார்களில் வந்துள்ளனர். அங்கு பழ வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒருவரிடம், தவெக வேட்பாளர் மற்றும் தொண்டர்கள் விசாரணை நடத்தினர். "பழம் விற்பது போல் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கிறாயா?" என்று கேட்டு, அவரிடமிருந்த பணத்தைப் பறிக்க முயன்றதாகத் தெரிகிறது.

அதற்கு அந்த நபர் தான் ஒரு வியாபாரி என்று விளக்கம் அளித்துள்ளார். எனினும், "வியாபாரி என்றால் இவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டுமா?" என்று தவெகவினர் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, அங்கிருந்த திமுகவினர் தவெகவினரின் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் சூழல் உருவானது. 

இது குறித்துத் தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காவுராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். வேட்பாளர் மற்றும் அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்ட இந்த திடீர் மோதலால், அந்த வாக்குச்சாவடி பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory