» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் துணிகரம்: கத்தி முனையில் 7 பவுன் நகை பறிப்பு - 3 மணி நேரத்தில் குற்றவாளி அதிரடி கைது!

சனி 7, மார்ச் 2026 10:21:03 AM (IST)



தூத்துக்குடியில் வீட்டின் சுவர் ஏறி குதித்து, பெண்ணை கத்தி முனையில் மிரட்டி 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற வாலிபரை 3 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் சிவகமலா (48). இவர் நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவன் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்துள்ளான். சிவகமலாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய அந்த நபர், அவர் அணிந்திருந்த 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 7 பவுன் தங்கத் தாலிச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டான்.

இச்சம்பவம் குறித்து சிவகமலா சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். அச்சமயம், விரல் ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தனது இருசக்கர வாகனத்தில் பசும்பொன் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஒரு வாலிபர், கத்தியைக் காட்டி மிரட்டி, தன்னை பழைய பேருந்து நிலையத்தில் கொண்டு போய் விடுமாறு கூறியுள்ளார். 

அந்த நபர் மீது சந்தேகம் கொண்ட பிரேம்குமார், சாமர்த்தியமாக அவரை வண்டியில் ஏற்றிக்கொண்டே சிப்காட் காவல் நிலையத்திற்கு ரகசியமாகத் தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்தவுடன் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை, தனிப்பிரிவு தலைமை காவலர் ராஜா மற்றும் சிறப்புப் படை காவலர் பிரபாகரன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய சோதனையில், சிவகமலாவிடம் பறிக்கப்பட்ட 7 பவுன் நகை இருப்பது உறுதி செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் பிடிபட்ட நபர் தென்காசி மாவட்டம் தேவிபட்டினம் பகுதியைச் சேர்ந்த பசுபதி மகன் சசிகுமார் (30) என்பது தெரியவந்தது. இவர் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தூத்துக்குடி டி.எம்.பி காலனியில் உள்ள தனது மாமியார் வீட்டில் மனைவி மீனா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருவதும், சென்ட்ரிங் வேலை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றம் நடந்த 3 மணி நேரத்திற்குள்ளாகவே துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துமாலை, பிரேம்குமார் மற்றும் போலீசாரைத் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மதன், ரூரல் டிஎஸ்பி சுதிர் ஆகியோர் வெகுவாகப் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory