» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா

சனி 7, மார்ச் 2026 12:04:40 PM (IST)



தமிழ்நாடு துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 136.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உயர் சிறப்பு மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  இன்று (7.3.2026) தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 136.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உயர் சிறப்பு மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தன்னலம் பாராத சேவையை பாராட்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கலந்துரையாடினார். 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது 1952 ஆம் ஆண்டு தூத்துக்குடி வட்ட அரசு மருத்துவமனையாக நிறுவப்பட்டது. 1986 ஆம் ஆண்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டு, பின்னர்  2000 ஆம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக உயர்த்தப்பட்டது.

முதலில் 100 எம்.பி.பி.எஸ் மாணவர்கள் சேர்க்கையுடன் தொடங்கப்பட்ட இந்த மருத்துவக் கல்லுரியில்,  தற்போது ஒரு வருடத்திற்கு 150 MBBS, முதுநிலை படிப்புகள், நர்சிங் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான கல்வியை வழங்கி, மாவட்டத்தில் மருத்துவக் கல்வி மற்றும் சுகாதார சேவைகளில் முக்கிய மையமாக  வளர்ந்து உள்ளது.

தினசரி சுமார் 2,500 முதல் 2,600 வரை வெளிநோயாளிகள் மற்றும் 900 முதல் 1,100 வரை உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தினசரி 40 - 50 பெரிய அறுவை சிகிச்சைகள் மற்றும்  60–70 சிறிய அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.

LaQshya Platinum சான்றளிக்கப்பட்ட இத்துறையில் பிரசவ கால (intrapartum)  மற்றும் பிரசவத்திற்கு பிறகு பராமரிப்பில் (Post partum ) உயர்தர சேவைகள் வழங்கப்படுகின்றன.

மகப்பேறுபிரிவில் தினசரி சுமார் 120-150 கர்ப்பகால பரிசோதனைகளும் நடைபெறுகின்றன. மகளிர் வெளிநோயாளி பிரிவில் தினசரி 70–80 மருத்துவப் பயனாளர்கள் பயன்பெறுவதுடன், வருடத்திற்கு சுமார் 4,800–5,000 பிரசவங்கள் வரை நடைபெறுகின்றன. 

136.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் 3,21,108 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட உயர் சிறப்பு மருத்துவமனை கட்டடத்தில் 687 படுக்கைகள் உள்ளன. இந்த மருத்துவமனை கட்டடம் மகளிர், தாய்மார்கள் மற்றும் குழந்தை ஆரோக்கியத்திற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டதாகும்.

புதிய கட்டடத்தில் அவசர மற்றும் கர்ப்பப் பரிசோதனை சேவைகள் (Antenatal Checkups), பிரசவ வார்டுகள் (Labour Wards), HDU, Obstetric ICU, Emergency OT, பிரசவத்திற்கு பிறகு பராமரிப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும் குழந்தையின்மைக்கான தனிப்பிரிவும் (Infertility Clinic) மற்றும் கருப்பை கருஉட்செலுத்துதல் (IUI) சேவைகளை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் மருத்துவப் பிரிவானது 145 சிறப்பு படுக்கைகளை கொண்டது. இதில் சிசு அவசரசிகிச்சை பிரிவு (NICU) குழந்தைகள் அவசர சிகிச்சைபிரிவு (PICU), PREM யூனிட் மற்றும் 90 படுக்கைகள் கொண்ட பொதுவான வார்டுகள் (Paediatric ward) உள்ளன. இப்பிரிவில் தாய்சேய் பராமரிப்பு யூனிட் (Mother-Newborn care Unit), தாய்ப்பால் வங்கி மற்றும் தடுப்பூசி சேவைகள் உள்ளன.

குழந்தைகள் அறுவை சிகிச்சைத் துறை - 30 படுக்கைகள் கொண்ட பிரத்தியேகமான ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான தனித்தனி வார்டுகள் உள்ளன. நான்கு படுக்கைகள் கொண்ட அறுவை சிகிச்சைக்கு பின் கவனிக்கப்படும் வார்டும்,  குழந்தைகளுக்கான உயர்தர மருத்துவ உபகரணங்கள் கொண்ட இரண்டு அறுவை சிகிச்சை அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிகழ்ச்சியில்  சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  பி. கீதா ஜீவன்,   மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர்  அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா, ஜி.வி.மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,  மாநகராட்சி மேயர்  பெ.ஜெகன், மாநகராட்சி ஆணையர்  சி.ப்ரியங்காகூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  ஆர். ஐஸ்வர்யாமருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சுகந்தி இராஜகுமாரி, மருத்துவக் கல்லூரி முதல்வர்  ஜி.சிவக்குமார் உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும்  உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory