» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பக்கிள் ஓடை தூர்வாரும் பணி தீவிரம்!

வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 8:48:50 AM (IST)


தூத்துக்குடியில் பக்கிள் ஓடை தூர்வாரி, சுற்றுச்சுவர் கட்டுமான பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் பக்கிள் ஓடை அமைந்து உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கோரம்பள்ளம் குளத்தில் இருந்து உபரிநீர் கடலுக்கு செல்வதற்காக பக்கிள் துரை என்ற ஆங்கிலேய அதிகாரியால் இந்த ஓடை அமைக்கப்பட்டது. இதனால் அவரது பெயரிலேயே இன்றளவும், இந்த ஓடை அழைக்கப்பட்டு வருகிறது. காலப்போக்கில் பக்கிள் ஓடை சாக்கடை கால்வாயாக மாறியது. 

தூத்துக்குடியின் கூவம் என்றழைக்கப்படும் வகையில், பக்கிள் ஓடையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டு அகலம் சுருங்கியது. இதனால் மழைக் காலங்களில் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து வந்தது. கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் பெய்த மழையால் தூத்துக்குடி நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. அப்போது பார்வையிட வந்த அப்போதைய உள்ளாட்சி அமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்கிள் ஓடையை சீரமைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் ரூ.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பக்கிள் ஓடை திரேஸ்புரம் கடற்கரை முதல் 3-ம் மைல் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு சீரமைக்கப்பட்டது.

அதன்பிறகு பக்கிள் ஓடையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டு, அந்த பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் காங்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பக்கிள் ஓடையில் பாலித்தீன் பைகள் உள்ளிட்ட குப்பைகள் அதிக அளவில் சேருவதால் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. அதே போன்று ஆங்காங்கே புற்கள் வளர்ந்து ஓடையை ஆக்கிரமித்து உள்ளன. இதனை தொடர்ந்து பக்கிள் ஓடையை தூர்வார வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் பக்கிள் ஓடையை 5 மீட்டர் அகலப்படுத்தவும், தூர்வாரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்து உள்ளார். அதன்பேரில் இந்திய உணவுக்கழக குடோன் பகுதியில் இருந்த பக்கிள் ஓடையை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஓடை முழுவதும் உள்ள புல் ஆக்கிரமிப்புகள் தூர்வாரும் பணியும் தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


மக்கள் கருத்து

Raja SinghAug 8, 2025 - 12:13:36 PM | Posted IP 172.7*****

பண விரயம். ஓடையை அகலப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஓடையை சுத்தம் செய்தால் போதும். அரசியல்வாதி பணம் சம்பாதிக்கிறார்.

BalamuruganAug 8, 2025 - 10:09:34 AM | Posted IP 162.1*****

ஆங்கிலேயர் காலத்தில் பக்கிள் ஓடையின் அகலத்தையே மீ்ண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவேண்டும் அகலம் குறைக்கபட்டதால் ஓடைவழியே செல்ல வேண்டிய வெள்ள நீர் குறுகலாக அமைக்கபட்டதால் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் வெள்ளம் வந்து பல உயிர் பலி ஏற்பட்டது பெரும் பொருட்கள் இழப்பு ஏற்பட்டு கடும் துயரத்திற்கு உள்ளானார்கள். மக்கள் தொகை பெருக்கம், நகர விரிவாக்கத்தை கருதி பல மடங்கு அகலத்தை அதிகரிக்கவேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory