» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு தோணி மூலம் மீண்டும் வெங்காயம் ஏற்றுமதி

புதன் 2, ஏப்ரல் 2025 8:11:48 AM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 6 மாதங்களுக்கு பிறகு தோணி மூலம் மீண்டும் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவு போன்ற பகுதிகளுக்கு காய்கறிகள், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தோணி மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இலங்கையில் இருந்து பழைய இரும்பு பொருட்கள், பழைய காகிதங்கள் கொண்டு வரப்படுகின்றன.

பொதுவாக தோணி போக்குவரத்து கடல் சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டு இயக்கப்படுகிறது. மே மாதம் 1-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி வரை கடலில் கடினமான காலநிலை காணப்படுவதால் தோணி இயக்கப்படுவது இல்லை. செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதி வரை சுமுகமான காலநிலை நிலவுவதால் தோணி போக்குவரத்து நடைபெறும்.

அதன்படி தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவு உள்ளிட்ட இடங்களுக்கு அதிக அளவில் சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன. அதேநேரத்தில் கடந்த 6 மாதமாக தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சரக்கு போக்குவரத்து நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் வெங்காயத்துக்கான ஏற்றுமதி வரி குறைக்கப்பட்டு இருப்பதால், தூத்துக்குடியில் இருந்து தோணி மூலம் வெங்காயம் ஏற்றுமதி அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி தோணி உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த லசிங்டன் கூறியதாவது: கடந்த 1990-ம் ஆண்டு வரை வாரத்துக்கு 4 தோணிகளில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு வத்தல், வெங்காயம் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டது. அதன்பிறகு இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் கன்டெய்னர்களில் குறைந்த விலையில் வெங்காயம் உள்ளிட்டவை ஏற்றி செல்லப்பட்டதால் தோணி தொழில் பாதிக்கப்பட்டது. 

கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் தோணி மூலம் இலங்கைக்கு சரக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது காலநிலையை கருத்தில் கொண்டு தோணி இயக்கப்பட்டு வருகிறது. 6 மாதங்களுக்கு பிறகு தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு தோணி போக்குவரத்து தொடங்கி உள்ளது. மேலும் வெங்காயத்துக்கான ஏற்றுமதி வரி 20 சதவீதம் குறைக்கப்பட்டு இருப்பதால், வெங்காயம் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. இதனால் பெனில் எனும் தோணியில் வெங்காயம் ஏற்றும் பணி நடந்து வருகிறது. 

இந்த தோணியில் சுமார் 200 டன் வரை வெங்காயம் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்ல 17 மணி நேரம் மட்டுமே ஆகும். இதனால் ஏதேனும் காலநிலை பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக தோணியை நிறுத்திக் கொள்ள முடியும். இதனால் ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி இயக்குவதற்கு அனுமதி கோரி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

New Shape Tailors



Arputham Hospital





Thoothukudi Business Directory