» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீன் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்: மீனவர்கள் மகிழ்ச்சி!
சனி 18, ஜனவரி 2025 3:40:30 PM (IST)
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.
பொங்கல் பண்டிகை முடிந்து தொடர் விடுமுறை மற்றும் இன்று சனிக்கிழமை என்பதால் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலை மோதியது. இன்று ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான நாட்டுப் படகு மீனவர்கள் கரை திரும்பி இருந்தனர். கடல் பகுதியில் காற்று அதிகமாக விசியதால் மீன்கள் அதிகமாக வலையில் சிக்காததால் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது.
இதனால் மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. சீலா மீன் ஒரு கிலோ 1000 முதல் 1200 ரூபாய் வரையும், விளைமீன், ஊழி, பாறை உள்ளிட்ட மீன்கள் கிலோ 600 முதல் 800 ரூபாய் வரையும் சாலை மீன் ஒரு கூடை 3200 ரூபாய் வரையும் நண்டு ஒரு கிலோ 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரையில் விற்பனையானது. ஏற்றுமதி மீன்களான தம்பா, பண்டாரி ஆகியவை கிலோ 400 ரூபாய் வரை விற்பனையானது. மீன்களுக்கு இன்று நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.