» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முகநூலில் லாட்டரி விளம்பரம்: பணத்தை இழந்த தூத்துக்குடி வாலிபர் தற்கொலை!
புதன் 8, ஜனவரி 2025 8:24:54 AM (IST)
முகநூலில் கேரளா லாட்டரி தொடர்பான கவர்ச்சி விளம்பரத்தால் ஏமாந்து ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த தூத்துக்குடி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மாணிக்கராஜா (22). இவர் கடந்த 4 மாதங்களாக சென்னை திருவொற்றியூர் கலைஞர் நகர் 2-வது தெருவில் வாடகை வீட்டில் நண்பர்களுடன் தங்கி தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் முகநூலில் கேரளா லாட்டரி பரிசு பணம் தொடர்பாக கவர்ச்சி விளம்பரம் ஒன்றை மாணிக்கராஜா கண்டுள்ளார்.
அப்போது அங்கு கொடுக்கப்பட்ட லிங்க் ஒன்றை அழுத்தியவுடன் அவர் வங்கி கணக்கில் இருந்த ரூ.35 ஆயிரம் பணம் மாயமானது. பணம் பறிபோனதால் அதிர்ச்சி அடைந்த மாணிக்கராஜா இது தொடர்பாக நண்பர்களிடம் கூறி புலம்பி வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் கயிற்றால் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து வேலைக்கு சென்ற நண்பர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மாணிக்கராஜா தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி அவரது உறவினரான காளிராஜ் (35) என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணிக்கராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.