» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மக்கள் தொடர்பு முகாமில் ரூ.35லட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்.
புதன் 8, ஜனவரி 2025 4:17:04 PM (IST)
சித்திரம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 91 பயனாளிகளுக்கு ரூ.35,06,190 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம், சித்திரம்பட்டி கிராமத்தில் இன்று (08.01.2025) நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த்துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மை மற்றும உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை போன்ற அரசுத்துறைகள் சார்பில் 91 பயனாளிகளுக்கு ரூ.35,06,190 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பேசும் போது தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பிறந்த குழந்தைகள் முதல் அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அரசுத்துறைகளின் வாயிலாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் ஒரு கடைக்கோடி கிராமத்தினை தெரிவு செய்து அக்கிராமத்திற்கு அரசு இயந்திரங்கள் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அரசுத்துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள், அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் திட்ட விளக்கக் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மேலும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றை பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு பொதுமக்களிடமிருந்து முன்னோடி மனுக்கள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலனை செய்து தகுதியான மனுதாரர்களுக்கு அவர்களுக்குரிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று பல்வேறு விதமான குறைதீர்ப்பு நடவடிக்கைகளை நமது அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தின கோரிக்கை மனுக்களை பெறக்கூடியது.
கடந்து ஒரு ஆண்டாக நடைபெறக்கூடிய உங்களைத்தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தாலுகாவை தேர்ந்தெடுத்து அந்த பகுதியில் உள்ள முக்கிய இடங்களிளெல்லாம் ஆய்வு செய்து அங்கும் மனுக்களை பெறக்கூடிய திட்டம், அதன்பிறகு முதலமைச்சர் அவர்களுடைய ஒரு உன்னத திட்டமான மக்களுடன் முதல்வர் முகாம்களை அமைத்து அதன்மூலம் மனுக்களை பெற்ககூடிய திட்டம்.
இப்படி பல்வேறு வகையான திட்டங்களின் மூலம் மக்களினுடைய கோரிக்கை மனுக்களைப் பெற்று அதற்கான உகந்த தீர்வுகளை நமது அரசுத்துறை அலுவலர்கள் செய்து வருகிறார்கள். இதில் அதிகமான கோரிக்கை மனுக்கள் வரக்கூடிய துறைகளைச் சேர்ந்தவர்கள் விரைவாகவும், சரியான தீர்வும் கொடுக்க வேண்டும். குறிப்பாக வருவாய்துதுறையில் அதிகமான கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. இந்த மனுக்கள் அனைத்தையும் வட்டாட்சியர், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் ஆகிய அனைவரும் சரியான முறையில் ஆய்வு செய்து உரிய தீர்வுகளை அந்த மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
அதனைடிப்படையில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றை பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு பொதுமக்களிடமிருந்து முன்னோடி மனுக்கள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலனைசெய்து தகுதியான மனுதாரர்களுக்கு அவர்களுக்குரிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்றையதினம் நடைபெறும் இந்த மக்கள் தொடர்பு முகாமில், வருவாய் துறையின் மூலமாக 3 பயனாளிகளுக்கு ரூ.1,48,500 மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 21 பயனாளிகளுக்கு ரூ.9,19,040 மதிப்பிலான வரன்முறைப்படுத்தப்பட்ட இலவச வீட்டுமனைப்பட்டாக்களும், 23 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளும், 02 பயனாளிகளுக்கு ரூ.45,000 இயற்கை மரணத்திற்கான உதவித்தொகைகளும், 03 பயனாளிகளுக்கு ரூ.11 ஆயிரம் கல்வி உதவித்தொகைகளும், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலமாக 12 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், கூட்டுறவுத்துறை மூலமாக 19 பயனாளிகளுக்கு ரூ.5,50,000க்கான கால்நடை பராமரிப்புக்கடன் உதவிகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலமாக 3 பயனாளிகளுக்கு ரூ.6,650 மதிப்பிலான இடுபொருட்களையும், தோட்டக்கலைத்துறையின் மூலமாக 2 பயனாளிகளுக்கு ரூ.24,000 மதிப்பிலான இடுபொருட்களையும், மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக 2 பயனாளிகளுக்கு சுயதொழில் (ஜவுளி வியாபாரம், நிலக்கடலை சார்ந்த பொருட்கள் தயாரித்தல்) தொடங்குவற்கு ரூ.16.96 இலட்சத்திற்கான வங்கிக் கடனுதவிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக 1 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,06,000 மதிப்பிலான விலையில்லா மின்கலம் பொருத்தப்பட்ட சிறப்புச் சக்கர நாற்காலியும் என மொத்தம் 91 பயனாளிகளுக்கு ரூ.35,06,190/-மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்படுகிறது.
இதுபோன்ற அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கடைக்கோடி கிராமங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்கு சென்று சேர வேண்டுமென்ற நோக்கத்தில் தான் இந்த மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான மக்கள் தொடர்பு திட்ட முகாம் தூத்துக்குடி மாவட்டத்தின் கடைக்கோடி எல்லை பகுதியில் அமைந்திருக்கக்கூடிய சித்திரம்பட்டி என்ற ஊரில் இன்று நடத்துகிறோம்.
பொதுவாக மக்கள் தொடர்பு முகாமின் முக்கிய நோக்கமே தொலை தூர கிராமங்களின் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்கள் எந்தவொரு சிரமமும் இன்றி அரசின் திட்டங்கள் மூலமாக பயன்பெற வேண்டும், அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் இத்திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும். இந்த சித்திரம்பட்டி கிராமம் வருவாய் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டமாகவும், அதே நேரத்தில் வளர்ச்சிப் பிரிவு தென்காசி மாவட்டமாகவும் உள்ளது.
இதனை சரி செய்வதற்கான முயற்சிகளை நாம் எடுத்து வருகிறோம். இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் மூலமாக நான் பொதுமக்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்ளக்கூடிய சில விஷயங்கள் இருக்கின்றன. குறிப்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் என்கிற ஒரு சிறப்பான திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 390க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மருந்துகள் குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால், இதில் பெரும்பாலான கிட்டதட்ட மூன்றில் ஒரு பங்கு நபர்கள் மட்டுமே நமது மக்களைத் தேடி மருத்துவம் பணியாளர்களாகிய தன்னார்வலர்களிடமிருந்து மருந்துகளை நேரடியாக பெற்று பயன் பெற்று வருகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் தனியார் மருந்துகளை வாங்கி உட்கொள்கிறார்கள். இந்த தனியார் மருந்துகள் வாங்கி உட்கொள்வது மூலமாக ஒரு மாதத்திற்கு அவர்களுக்கு சுமார் 1500 ரூபாய் செலவாகும். இந்த ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வாங்கக்கூடிய மருந்தை மக்களைத் தேடி மருத்துவம் என்ற சிறப்பான திட்டத்தின் கீழ் முழுமையாக விலையில்லாமல் தருகிறோம். ஆனால் பொதுமக்களிடம் இருக்கக்கூடிய ஏதோ ஒரு தவறான புரிதல் காரணமாக தனியார் மருத்துவமனைகள், தனியார் மெடிக்கல்களிலிருந்து வாங்கி உட்கொள்கிறார்கள்.
இதன் காரணமாக ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு மட்டுமே ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாய் செலவாகும். பொதுமக்கள் இந்த நிலையை மாற்றி தமிழ்நாடு அரசின் மிகவும் ஒரு உன்னதமான திட்டமாகவுள்ள மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலமாக பயன்பெற்று ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும். வீட்டிற்கே நேரடியாக வந்து மருத்துவச் சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள அற்புதமான திட்டம் தான் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம். இது போன்ற திட்டம் வேறு எந்தவொரு நாட்டிலோ, மாநிலத்திலோ இல்லை. நம்ம மாநிலத்தில் மட்டும்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்களது வேளாண் நிலங்களின் மண் வளம் குறித்து அறிந்து பயன்பெறும் வகையில் வேளாண்மைத்துறையின் சார்பில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் வந்துள்ளது. எனவே தங்களது விவசாய நிலங்களின் மண் வளம் குறித்து அறிந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் தங்களது வேளாண் நிலங்களிலுள்ள மண்ணை சிறிதளவு எடுத்து வந்து கொடுத்து பரிசோதித்துக் கொள்ளலாம். மண் வளத்திலுள்ள சத்துக்கள், தலைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து உள்ளிட்ட சத்துக்களின் மூலமாக மண் வளத்தை மேம்படுத்துவது குறித்தும் உரிய வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். இந்த வாய்ப்பினை அனைத்து விவசாய பெருமக்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றியும், திட்டங்களின் பயன்கள் குறித்தும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து பயன்பெறும் வகையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட தொழில் மையம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் கருத்துக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது அதனை அனைவரும் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெற வேண்டும்.
ஆகையால் சித்திரம்பட்டி நமது மாவட்டத்தினுடைய கடைசி எல்லைப்பகுதியாக இருந்தாலும் இந்த கிராமத்திற்கு தேவையான அனைத்து நலத்திட்டங்கள், வளர்ச்சித்திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களும் சென்றடையும் வகையில் அனைத்துத்துறைகளும் முழு முயற்சியை எடுக்கும் என்று இந்த நேரத்தில் உங்களுக்கு உறுதி அளித்து அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, குருவிகுளம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் விஜயலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ்வரன், மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பென்னட்ஆசிர், இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, உதவி ஆணையர் (கலால்) கல்யாணகுமார், கோவில்பட்டி வட்டாட்சியர் சரவணபெருமாள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேவி, சித்திரம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கேசவன், சித்திரம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாரிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.