» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நீர் நிலைகளை பாதுகாத்தால் மட்டுமே எதிர்காலம் செழிக்கும் : வேளாக்குறிச்சி ஆதினம் பேச்சு
திங்கள் 6, ஜனவரி 2025 8:23:32 AM (IST)
நீர் நிலைகளை பாதுகாத்தால் மட்டுமே எதிர்காலம் செழிக்கும் என்று செய்துங்கநல்லூர் கோவிலில் நடந்த விழாவில் வேளாக்குறிச்சி ஆதினம் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் சிவகாமி அம்பாள் சமேத பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் கோவில். மிகவும் பழமையான இந்த கோவிலில் வருடம் தோறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்தகோயிலில் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியை செங்கோல்மட ஆதினம் துவக்கி வைத்தார்.
இரண்டாம் நாள் நாகப்பட்டினம் திருப்புகழுரை தலைமையிடமாக கொண்ட வேளாக்குறிச்சி ஆதினம் கலந்துகொண்டு 1008 சங்காபிசேகத்தினை துவக்கி வைத்தார். இதையொட்டி இதற்காக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து கோவிலில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது.
அதன் பின்னர் நடராஜர் உள்பட பரிவார உற்சவர்களுக்கு 7 வகையான அபிசேகமும், நடராஜர் உற்சவருக்கு 1008 சங்காபிசேகமும் நடந்தது. அதைபின் நடராஜர் உள்பட தெய்வங்களுக்கு அலங்காரம் சிறப்பு பூஜை தீபாரதனை நடந்தது. இந்தநிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழாவை துவக்கி வைத்து வேளாக்குறிச்சி ஆதினம் 18வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞானமகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பக்தர்களிடையே அருளாசி வழங்கி பேசினார்.
அவர் பேசும் போது தாமிரபரணி ஆற்றங்கரையில் அம்பாசமுத்திரத்தில் தோன்றிய வேளாக்குறிச்சி ஆதினம், அம்பாசமுத்திரத்தின் பழமையான பெயரான வேளக்குறிச்சி என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது. 14 நூற்றாண்டில் துவங்கப்பட்ட பழையான இந்த ஆதினம், தற்போது நாகப்பட்டினம் திருப்புகழுரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
ஆனால் தாமிரபரணி கரையை எப்போதுமே நம் ஆதினம் மறப்பது இல்லை. தற்போது கூட கல்லிடைகுறிச்சியில் கிளை மடம் இயங்கித்தான் வருகிறது. நமது ஆதினம் அனைத்து மதங்களையும் அரவணைத்து சென்றாலும் சைவத்தினை வளர்க்க அரும்பாடு பட்டு வருகிறது. எப்போதுமே சைவ நெறியை பரப்பு அனைத்து உதவிகளையும் செய்துவருகிறது.
தென் தில்லை என போற்றப்படும் செய்துங்கநல்லூரில் உள்ள சிவகாமி சமேதா பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வர் ஆலயத்தில் இன்று சங்காபிசேகத்தினை துவக்கி வைத்து அருளாசி தருவதற்கு காரணம் உண்டு. எங்களுடைய ஆதினத்தில் புலவர் முக்காளிங்க முனிவர் தாமிரபரணியை பற்றி பேசும் போது கங்கையே தனது பாவத்தினை போக்க மார்கழி மாதம் தோறும் தாமிரபரணியில் உரைகிறாள். ஆகவே மார்கழியில் தாமிரபரணியில் ஞானம் செய்தால் கங்கை சென்று குளித்த புண்ணியம் கிட்டும் என்கிறார்.
அதன் படியே பெருமை மிக்க பூமி நமது தென்னக பூமி. ஆகவே தான் இந்த பூமியில் விழா என்றவுடன் கலந்து கொள்ள பல கிலோ மீட்டர் கடந்து வந்துள்ளேன். பக்தர்களுக்கு பெரும் புண்ணியம் நமது புண்ணிய நதிகளை காப்பாற்றுவது. கங்கையின் பாவத்தினை போக்கிய தாமிரபரணியை பாதுகாப்பது நமது கடமை. நீர் நிலைகளை பாதுகாத்தால் மட்டுமே எதிர்காலம் செழிக்கும் என்று அவர் பேசினார். முன்னதாக வேளாக்குறிச்சி ஆதினத்துக்கு பக்தர்களால் வரவேற்பு மற்றும் பூர்ண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் மாரியப்பன், கட்டளை தாரர் சுப்பிரமணியன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, அர்ச்சகர்கள் முத்துராமன், பாலசுப்பிரமணியன், முத்துசாமி உள்பட வி.கோவில்பத்து, செய்துங்கநல்லூர் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வர் ஆன்மிக பேரவையினர் கலந்துகொண்டனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் வருகிற 13 ஆம் தேதி அதிகாலையில் நடைபெற உள்ளது.