» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திங்கள் 6, ஜனவரி 2025 7:58:43 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள்.
இந்த நிலையில் மார்கழி மாதம் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் வழக்கம் போல் நடைபெற்றது.
விடுமுறை தினத்தையொட்டி நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் குடும்பத்துடன் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி சுமார் 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் பொதுதரிசன வரிசையிலும், 100 ரூபாய் கட்டண தரிசன வரிசையிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் வேல்குத்தி, பால்குடம், காவடி எடுத்து வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.