» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக் திருட்டு: சிறுவன் உள்பட 4 பேர் கைது!
ஞாயிறு 5, ஜனவரி 2025 10:03:10 AM (IST)
தூத்துக்குடியில் கம்ப்யூட்டர் சர்வீஸ் இன்ஜினியரின் மோட்டார் பைக்கை திருடிய சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி வி.வி.டி. தண்ணீர் தொட்டி அருகே உள்ள முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாபு (35). கணினி பழுது நீக்கும் தொழில் செய்யும் இவர் மோட்டார் சைக்கிளை தனது வீட்டின் முன்பு கடந்த 2-ந்தேதி இரவு நிறுத்திவிட்டு, மறுநாள் காலையில் பார்த்தபோது திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அம்பத்கர் நகரைச் சேர்ந்த சந்தனராஜ் (24), சோட்டயன்தோப்பு வ.உ.சி. நகரைச் சேர்ந்த மூர்த்தி (25), மாப்பிள்ளையூரணி சவேரியார்புரத்தைச் சேர்ந்த செல்வராஜ் (25) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் இந்த மோட்டார் பைக்கை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் மோட்டார் பைக்கையும் மீட்டனர்.