» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் : ஆட்சியர் க.இளம்பகவத் துவக்கி வைத்தார்
ஞாயிறு 5, ஜனவரி 2025 9:15:28 AM (IST)
தூத்துக்குடியில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில், அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் இன்று 5.01.2025 தருவை விளையாட்டு மைதானத்தில் இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாரத்தான் ஓட்டப் போட்டியானது மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து ஆரம்பித்து ஜார்ஜ் ரோடு, பெல் ஹோட்டல் கார்னர், ரோச் பூங்கா, பீச் ரோடு ரயில்வே கேட் வரை சென்று மீண்டும் அதே வழியில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நிறைவு பெற்றது. போட்டிகளில் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 170 நபர்கள் கலந்து கொண்டார்கள். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டுச் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கினார்.
வெற்றி வீரர். வீராங்கனைகளுக்கு முதல் பரிசு தலா ரூ. 5,000/-. இரண்டாம் பரிசு தலா ரூ. 3,000, மூன்றாம் பரிசு தலா ரூ.2,000, 4 முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு தலா ரூ. 1,000 வீதம் பரிசுத் தொகை காசோலையாக வழங்கப்பட்டது. ந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சு. அந்தோணி அதிஷ்டராஜ், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.