» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உருகுலைந்து கிடக்கும் பழங்காலத்து தேர் சிற்பங்கள் : அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 5, ஜனவரி 2025 9:10:53 AM (IST)
ஸ்ரீவைகுண்டத்தில் உருகுலைந்து கிடக்கும் பழங்காலத்து தேர் மரச்சிற்பங்களை பாதுகாத்து அருங்காட்சியத்தில் வைக்க நடைவடிக்கை எடுக்கப்படுமா? என அறநிலையத்துறையிடம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 9 நவ கைலாய தலங்கள் அமைந்துள்ளது. இந்த ஒன்பது நவ கைலாய தலங்களும் ஒவ்வொரு பரிகார தலமாக விளங்கி வருகிறது. இதில் ஆறாவது நவ கைலாயமாக விளங்குகிறது தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் கோவில். இந்த கோவில் சனி தலமாக விளங்குகிறது. வைணவர்களுக்கு பூலோக வைகுண்டம் என்றும், சைவர்களுக்கு பூலோக கைலாசம் எனவும் புகழப்படுவது இந்த ஊராகும். இந்த ஊரில் நவ திருப்பதியில் முதல் திருப்பதியான கள்ளபிரான் கோயில் உள்ளது.
இந்த கோயிலில் மிகப்பிரமாண்டமான தேர் ஓடுகிறது. இதுபோலவே மற்றொரு தேர் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் ஆலயம் இருந்துள்ளது. சுமார் 60 வருடங்களுக்கு முன்பு வரை இந்த தேர் ஓட்டம் மிகவும் சிறப்பாக நடந்துள்ளது. காலப்போக்கில் தேரோட்டம் நின்றுபோய்விட்டது. இதனால் இங்குள்ள தேர் அப்படியே ஒரிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது. தற்போது பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் ஒரு காலத்தில் மிகவும் பிரமாண்டமாக காட்சியளித்த தேரில் உள்ள மரச்சிற்பங்கள்எல்லாம் பெயர்ந்து கீழே விழுந்து எதற்கும் உதவாமல் போய் விடுகிறது.
இந்த தேரில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் காலத்து சிற்பங்களான பெருமாள், தட்சிணாமூர்த்தி, பிரதோஷ மூர்த்தி, கஜலெட்சுமி, யாழி, பசு பால் கொடுக்கும் சிவலிங்கம், அரசனின் உருவங்கள், யானை பயிற்சி உருவங்கள், பூதகணங்கள், கோயில் கட்ட பல்லக்கில் பொருள்களை கொண்டு செல்லும் சிவனடியார்கள் என சுமார் 1500 க்கும் மேற்பட்ட மரச்சிற்பங்கள் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு இன்ச் அளவில் இருந்து ஒரு அடி உயரம் அளவுக்கு பல்வேறு வகையான சிற்பங்கள் இந்த தேரில் நான்கு புறமும் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பை கூறும் விதமாக போர் குறித்தும், கண்ணப்பரின் கதை, நடனக்கலைகள் குறித்தும், வீணை மீட்டுவது நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும், போர்க்கருவிகளை பயன்படுத்தும் முறைகள், பெண் தன்னை கண்ணாடியில் பார்க்கும் அழகிய சிற்பம், குறவன் தோளில் இளவரசி அமர்ந்திருக்கும் சிற்பம், பல்வேறு ஆன்மீக தகவல்களை குறித்து கூறப்படும் இந்த மரச்சிற்பத்தில் மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தேர் பராமரிப்பின்றி காணப்படுவதால் இந்த மரச்சிற்பங்கள் அனைத்தும் தற்போது அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த பகுதி மக்கள் கோவிலுக்கு புதிய தேர் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.இதன் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்த்த ராஜ் சட்டப்பேரவையில் புதிய தேர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு புதியதேர் அமைக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து புதிய தேர் செய்யும் பணிகள் நடந்து வருவதாக அறநிலையத்துறை மூலமாக கூறப்படுகிறது.
புதிய தேர் செய்து தேர் ஓட நடவடிக்கை எடுத்தாலும் கூட ஏற்கனவே ஓடிய பழைய தேர் பராமரிப்பின்றி வெயிலிலும், மழையிலும் சேதமடைந்து கிடைக்கிறது. சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த தேரில் உள்ள நாயக்கர் காலத்து மரச்சிற்பங்களை பாதுகாத்து கோவிலில் இந்த மரச்சிற்பங்களை பக்தர்களின் பார்வைக்கு கண்காட்சியாக வைத்து பழமையான இந்த சிற்பங்களை பாதுகாக்க வேண்டும் என்று பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பரதநாட்டிய கலைஞர் திருநங்கைபொன்னி கூறுகையில், நான் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள நாட்டிய சிற்பங்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்ட ஆய்வாளராக முயற்சி செய்து வருகிறேன். இதற்காக தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள பல்வேறு சிறப்பங்களை தேடி வந்தேன். ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள பழமையான தேரில் அதிக அளவிலான சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதை நேரில் கண்டேன்.
ஆனந்தம் அடைந்தேன். நடனம் சார்ந்தும், போர்க்கலை சார்ந்த விஷயங்கள் இந்த தேரில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேர் தற்போது பராமரிப்பு இன்றி சிதிலடைந்து கிடக்கிறது. இதில் உள்ள மரச்சிற்பங்கள் எல்லாம் உடைந்து கீழே விழுகிறது. நமது கண் முன்பே பழங்கால பொருள்கள் அழிந்து வருவது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. எனவே இந்த மரச்சிற்பங்களை பாதுகாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
எழுத்தாளரும் தொல்லியல் ஆர்வலருமான முத்தாலங்குறிச்சி காமராசு கூறுகையில், பூலோக வைகுண்டம் மற்றும் பூலோக கைலாசம் என வைணவர்களாலும்,சைவர்களாலும் கொண்டாடப்படும் ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த காலங்களில் இரண்டு தேர்கள் ஓடியது. ஆனால் தற்போது ஒரு தேர் மட்டுமே ஓடுகிறது. கைலாசநாதர் கோவில் தேர் தற்போது ஓடவில்லை. ஆனால் சிதிலடைந்து கிடக்கிறது. புதிய தேர் அமைக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது அதற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பழைய தேரில் உள்ள மரச்சிற்பங்களை போல தற்போது சிற்பங்களை செய்ய இயலுமா என்பது சந்தேகம் தான்.
ஆகவே இந்த தேரில் உள்ள பாகங்களை சேகரித்து கைலாசநாதர் கோயில் வளாகத்தில் ஒரு அருங்காட்சியகம் அமைத்து, அந்த அருங்காட்சிகத்தில் இந்த மரச்சிற்பங்களை காட்சிப்படுத்தவேண்டும். மீதி இருக்கும் தேரையும் பராமரித்து இங்கே காட்சிப்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கையை உடனே அறநிலையத்துறை ஏற்பாடுசெய்ய வேண்டும் என்று கூறினார்.
சுமார் 500 வருடங்களுக்கு முன்பு நமது முன்னோர்கள் உருவாக்கிய சிறப்பான தேரைநம்மால் பாதுகாக்க முடியவில்லை. சிதிலமடைய விட்டு விட்டோம். எஞ்சிய மரச்சிற்பங்களையாவது காட்சிபடுத்த வேண்டும் என்பது ஸ்ரீவைகுண்டம் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.