» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுதானிய சாகுபடிக்கு மானியம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 27, டிசம்பர் 2024 11:45:39 AM (IST)
சிறுதானிய சாகுபடிக்கு உழவு மானியம் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக வழங்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தமிழகத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு, தினை வரகு, சாமை, குதிரைவாலி, பனிவரகு போன்ற சிறுதானியங்களின் உற்பத்தி, பரப்பு ஆகியவற்றை அதிகரிக்கும்பொருட்டு தரிசு நிலங்களில் சிறுதானிய சாகுபடி செய்வதற்காக உழவு மேற்கொள்ள மானியமாக அதிகபட்சமாக ஒரு ஹெக்டேருக்கு 40 சதவீதம் அல்லது ரூ.5400 பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 145 ஹெக்டேர் தரிசு நிலங்களை பண்படுத்தி உழவுப்பணி செய்து, சிறுதானியங்கள் சாகுபடி செய்வதற்கு ரூ.7.83 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் உழுவை இயந்திரத்துடன் சட்டிக் கலப்பை, கொத்துக் கலப்பை மற்றும் சுழற்கலப்பை ஆகியவற்றை தங்களின் தேவையின் அடிப்படையில் செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டும் செய்து முடிக்கப்பட்ட பரப்பளவின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட மானியம் கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது.
ஒரு விவசாயி அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரையிலான பரப்பளவிற்கு மானியம் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது நிலப்பட்டா, சிட்டா, அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார், வங்கிப் புத்தகத்தின் முதல் பக்க நகல், சாதிச் சான்றிதழ் மற்றும் சிறு குறு விவசாயி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறுது.
மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி, திருவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டார தனிநபர் விவசாயிகள் உதவி செயற் பொறியாளர் (வே.பொ) தூத்துக்குடி (9443688032), கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், புதூர் மற்றும் விளாத்திகுளம் வட்டார தனிநபர் விவசாயிகள் உதவி செயற் பொறியாளர் (வே.பொ), கோவில்பட்டி (9443276371) மற்றும் ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி வட்டார தனிநபர் விவசாயிகள் உதவி செயற் பொறியாளர் (வே.பொ) திருச்செந்தூர் (8778426945) ஆகியோரைத் தொடர்பு கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.