» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பழுதான எலக்ட்ரிக் வாகனத்திற்கு பதில் புதிய வாகனம், ரூ.1லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
வெள்ளி 27, டிசம்பர் 2024 8:40:37 PM (IST)
தூத்துக்குடியில் பழுதான எலக்ட்ரிக் வாகனத்திற்கு பதிலாக புதிய வாகனம் மற்றும் ரூ.1லட்சம் இழப்பீடு ஆகியவற்றை விற்பனையாளர் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சார்ந்த முரளி என்பவர் தூத்துக்குடி எட்டயபுரம் சாலையிலுள்ள விற்பனையாளரிடம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் வாங்கியுள்ளார். வாங்கிய சில நாட்களிலேயே வாகனம் பழுதடைந்ததால் சர்வீஸ்க்கு விட்டுள்ளார். எலெக்ட்ரிக் வாகனம் என்பதால் பேட்டரி பழுதடைந்ததாக எதிர்மனுதாரர் தெரிவித்தார். பின்பு அதற்குரிய தொகையை பெற்றுக் கொண்டு சரிசெய்து கொடுத்துள்ளார்.
ஆனால் மீண்டும் மீண்டும் வாகனம் பழுதடைந்துள்ளது. உடனே மேற்படி இருசக்கர வாகனத்தை மாற்றித்தருமாறு மனுதாரர் கூறியுள்ளார். அதற்கு எதிர்மனுதாரர் இந்த பிரச்சினை சரியாகி விடும் என்று மழுப்பலான பதில்கூறி வாகனத்தை மாற்றித் தரவில்லை. இதனால் மன உளைச்சல் அடைந்த மனுதாரர் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட குறைதீர் ஆணைய தலைவர் திருநீலபிரசாத் உறுப்பினர் ஆ.சங்கர், ஆகியோர் பழுதான இருசக்கர வாகனத்திற்கு பதில் புதிய இருசக்கர வாகனம், சேவைக் குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்டஈட்டு தொகை ரூ.1இலட்சம், வழக்கு செலவுத் தொகை ரூ.5,000 ஆகியவற்றை இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.