» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
வெள்ளி 27, டிசம்பர் 2024 8:46:48 AM (IST)
தூத்துக்குடி அருகே சுமார் 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய அவரது கூட்டாளியை தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட்ஜான் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி போதை பொருள் தடுப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நேற்று புதுக்கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போதை பொருள் தடுப்பு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் புதுக்கோட்டை பகுதியில் கண்காணிப்பில் ஈடுட்டனர். அங்கு உள்ள ஒரு தியான மண்டபத்தின் பின்புறம் 2 பேர் பார்சலுடன் நின்று கொண்டு இருந்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக சென்றனர். போலீசாரை பார்த்தவுடன் அந்த 2 பேரும் பார்சலுடன் தப்பி ஓடினர். சுதாரித்து கொண்ட போலீசார் துரத்தி சென்று பார்சலுடன் ஒருவரை பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.
போலீசார் பிடிபட்டவர் வைத்திருந்த பார்சலை சோதனை நடத்தியபோது, அதில் சுமார் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அந்த கஞ்சா பார்சலை பறிமுதல் செய்த போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் புதுக்கோட்டையை சேர்ந்த வினித்ராஜ் (23) என்பதும், தப்பி ஓடியவர் அழகுமுத்து (23) என்பதும் தெரியவந்தது.
உடனடியாக தனிப்படை போலீசார் வினித்ராஜையும், பறிமுதல் செய்த கஞ்சாவையும் தூத்துக்குடி மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அந்த பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வினித்ராஜை கைது செய்தனர். தப்பி ஓடி தலைமறைவான அவரது கூட்டாளியான அழகுமுத்துவை மதுவிலக்கு போலீசார் தேடிவருகின்றனர்.