» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின்வாரியத் தலைவர் திடீர் ஆய்வு
வெள்ளி 27, டிசம்பர் 2024 8:30:49 AM (IST)
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தமிழக மின்வாரியத் தலைவர் நந்தகுமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடியில் உள்ள தமிழக அரசின் மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில், தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் தினமும் சுமார் 1,050 மெகாவாட் வரை மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அனல் மின்நிலைய பாய்லர்களை குளிர்விக்க கடலில் இருந்து கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
இதற்காக 20 அடி அகலத்தில் 25 அடி ஆழம் கொண்ட தனி கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் சுற்றுச்சுவர் கடந்த 14 ஆம் தேதி பெய்த கனமழையால் உடைந்தது. இதனால், அங்கு கொட்டப்பட்டிருந்த நிலக்கரி சாம்பல் கழிவுகளுடன் தண்ணீர் கலந்து பாய்லர்களுக்குள் புகுந்ததால், 1, 2, 3 ஆகிய அலகுகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த சாம்பல் கழிவுகளை அகற்றும் பணி 10 நாள்களுக்கு மேலாகியும் முடிவடையாததால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அனல் மின்நிலையத்தில் நந்தகுமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, சாம்பல் கழிவுகள் அகற்றும் பணியை பார்வையிட்டார். அப்போது, சுற்றுச்சுவர் இடிந்த விவரம் குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். ஜன. 5ஆம் தேதிக்குள் அனைத்து கழிவுகளும் அகற்றப்பட்டு மின் உற்பத்தியை தொடங்கவேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.