» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மீனவ கிராமங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்!
புதன் 25, டிசம்பர் 2024 8:44:46 PM (IST)
தூத்துக்குடி தருவைகுளம் மீனவ கிராமத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மீன்வளம் பெருக வேண்டி பெண்கள் கும்மியாட்டம் கோலாட்டம் ஆடி முளைப்பாரி ஊர்வலம் சென்றனர்.
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தருவைகுளம், மீனவ கிராமத்தில் கிறிஸ்து பிறப்பை வரவேற்கும் வகையில் கடந்த ஒரு வார காலமாக மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் மீன்வளம் மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி 120க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரிகளை வளர்த்து வந்தனர்.
இன்று கிறிஸ்து பாலன் பிறப்பை முன்னிட்டு முளைப்பாரியை ஆலயம் முன்பு வைத்து நூற்றுக்கணக்கான பெண்கள், சிறுமிகள் கலியலாட்டம், கும்மியாட்டம், கோலாட்டம் ஆடி தமிழகத்தின் பாரம்பரிய முறைப்படி பாடல்களை பாடியபடி உற்சாகமாக கொண்டாடினர். இதைத்தொடர்ந்து முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்துச் சென்று பின்னர் கடலில் கரைத்து வழிபட்டனர்.
இதுபோல், ராஜபாளையம், சிலுவைபட்டி, வெள்ளப்பட்டி, உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.