» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
புதன் 25, டிசம்பர் 2024 3:36:34 PM (IST)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக காெண்டாடப்பட்டது. கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஏசுகிறிஸ்து பிறப்பை, கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
தூத்துக்குடி சின்னக்கோவில் என்று அழைக்கப்படும் திருஇருதய பேராலயத்தில் மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு கூட்டுத்திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் பங்குதந்தை ஸ்டார்வின் தலைமையில் உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
இதுபோல் புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்குதந்தை அமல்ராஜ் தலைமையிலும், யூதாத தேயூ ஆலயத்தில் பங்குதந்தை அருமைநாயகம் தலைமையிலும், ஸ்டேட்பாங்க் காலனி அன்னை வேளாங்கன்னி ஆலயத்தில் பங்கு தந்தை ஜெரோசின் கற்றார் தலைமையிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராத்தனைகள் நடந்தன.
தென்னிந்திய திருச்சபைக்குட்பட்ட டூவிபுரம் தூய யாக்கோபு ஆலயத்தில் சேகரகுரு எமில் சிங் தலைமையிலும், மில்லர்புரம் புனித பவுலின் ஆலயத்தில் சேகரதலைவர் இஸ்ரேல் துரைசிங் தலைமையிலும், வடக்கூர் பரி பேட்ரிக் இணை பேராலயத்தில் சேகரத் தலைவர் செல்வின்துரை தலைமையிலும், சண்முகபுரம் பரி பேதூரு ஆலயத்தில் திருமண்டல குருத்துவ செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்ட்றக் தலைமையிலும், ஆசிரியர் காலனி பரி. திருத்துவ ஆலயத்தில் சேகரத் தலைவர் செல்வசிங் ஆர்தர் தலைமையிலும், சிதம்பர நகர் அபிஷேக நாதர் ஆலயத்தில் சேகரத் தலைவர் டேவிட் அதிசய ராஜ் தலைமையிலும் சிறப்பு பிராத்தனைகள் நடந்தன.
போல்பேட்டைநல்மேய்ப்பர் ஆலயத்தில் சேகர குருலிவிங்ஸ்டன் தலை மையிலும், திரவியபுரம் சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் திருமண்டல உப தலைவர் தமிழ்செல்வன் தலைமையிலும், சுப்பிரமணியபுரம் சகல பரிசுத்தவான்கள் ஆலயத்தில் சேகரத் தலைவர் டேவிட்ராஜ் தலைமையிலும், சாயர்புரம் திரித்துவ ஆலயத்தில் சேகரத் தலைவர் மனோகரன் தலைமையிலும் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
தூத்துக்குடி வி.வி.டி ரோடு கேசிகேஎஸ் காலனியிலுள்ள கிறிஸ்தவ விசுவாச ஜெனரல் அசெம்பிளி சபையில் தலைமை போதகர் பால் ஆண்ட்ரூ கனகராஜ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தூத்துக்குடி கேவிகே நகர் ஐபிஎம் தலைமை சபையில் பேராயர் ஸ்டீபன் மற்றும் போதகர் சாம் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு பிரார்தனைகள் நடந்தன.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.