» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நடப்பு வருடத்தில் 363.94 மி.மீ மழை பெய்துள்ளது : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!
வியாழன் 21, நவம்பர் 2024 8:25:12 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு வருடத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் இதுநாள் வரை 363.94 மி.மீ மழை அளவு கிடைக்கப் பெற்றுள்ளது என ஆட்சியர் க.இளம்பகவத்,தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (21.11.2024) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு வருடத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் இதுநாள் வரை 363.94 மி.மீ மழை அளவு கிடைக்கப் பெற்றுள்ளது. அணைகளின் நீர் இருப்பு (20.11.2024 அன்று) பாபநாசம் அணையில் 143 அடி கொள்ளவில் 87 அடி நீர் இருப்பும், மணிமுத்தாறு அணையில் 118 அடி கொள்ளவில் 73.64 அடி நீர் இருப்பும், சேர்வலாறு அணையில் 156 அடி கொள்ளவில் 82.68 அடி நீர் இருப்பும் உள்ளது. பாபநாசம் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து 1062.836 கன அடியாக உள்ளது. 1504.75 கன அடிநீர் தற்போது திறந்துவிடப்படுகிறது.
தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் 12.059 மெ.டன், சோளம் 2.455 மெ.டன், உளுந்து 26.93 மெ.டன்,கம்பு 26.115 மெ.டன், பாசிப்பயறு 0.1 மெ.டன், நிலக்கடலை10.015 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது, மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் 5070 மெ.டன் யூரியா, 2420 மெ.டன் காம்ப்ளக்ஸ், 2448 மெ.டன் டி.ஏ.பி மற்றும் 872 மெ.டன் பொட்டாஷ் உரங்கள் இருப்பில் உள்ளன. நடப்பு நவம்பர், 2024 மாத தேவைக்கு நமது மாவட்டத்திற்கு 4960 மெ.டன் யூரியா, 3470 மெ.டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 1150 மெ.டன் டி.ஏ.பி ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட உர நிறுவனங்களால் இம்மாத தேவைக்கான உரங்கள் 1944 மெ.டன் யூரியா 560 மெ.டன் டி.ஏ.பி மற்றும் 1020 மெ.டன் காம்ப்ளக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
2023-2024ம் ஆண்டு ராபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உளுந்து பயிருக்கு ரூ.58.25 கோடி, பாசிப்பயறுக்கு ரூ.16.53 கோடி, மக்காச்சோளத்திற்கு ரூ.90.07 கோடி, கம்பு பயிருக்கு ரூ.9.38 கோடி, சோளப்பயிருக்கு ரூ.6.69 கோடி, நிலக்கடலை பயிருக்கு ரூ.0.12 கோடி, எள் பயிருக்கு ரூ.0.042 கோடி, சூரியகாந்தி பயிருக்கு ரூ.3.02 கோடி என மொத்தம் ரூ.184.102 கோடி காப்பீட்டுத்தொகை இப்கோ-டோக்கியோ காப்பீட்டு நிறுவனத்தால் 75799 விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நெல்-ஐஐஐ பயிருக்கு நவம்பர் மாத இறுதிக்குள்ளும் மற்றும் பருத்திபயிருக்கு மத்திய,மாநிலஅரசுகளின் மானியம் கிடைக்கப்பெற்றவுடன் விரைவில் இப்கோ-டோக்கியோ காப்பீடு நிறுவனத்தால் பயிர் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு விடுவிக்கப்படும்.
விடுபட்டுள்ள உளுந்து, பாசிப்பயறு மற்றும் மக்காச்சோளம் ஆகிய பயிர்களுக்கான காப்பீட்டுத்தொகை கணிணி (Pகுஆளு) குறைபாடு காரணமாக நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள தொகை விரைவில் இப்கோ-டோக்கியோ காப்பீடு நிறுவனத்தால் விவசாயிகளுக்கு விடுவிக்கப்படும். புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2024-25ஆம் ஆண்டிற்கு ராபி பருவ பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்துபயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் வங்கிகளில் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறவிவசாயிகள் அனைவரும் தங்கள் விருப்பத்தின் பேரில் பொது சேவை மையங்கள் மூலமாகவோ,தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2023 டிசம்பர் மாதம் பெய்த அதீத கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணமாக பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தில் பேரிடருக்கு முன் பதிவு செய்த விவசாயிகளுக்கு வாழை, கொத்தமல்லி, வெங்காயம் மற்றும் சிவப்பு மிளகாய் பயிர்களுக்கு ரூ.21.97 கோடி இழப்பீட்டுத் தொகையானது 26,382 விவசாயிகளுக்கு இப்கோ டோக்கியோ காப்பீடு நிறுவனத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மீதம் 26.15 கோடி ரூபாய் கூடுதலாக இழப்பீடு வழங்கப்பட வேண்டிய நிலை உள்ளது . இதில் மாநிலஅரசின் பங்கீடான 17.56 கோடி ரூபாய் கூடுதல் நிதியினை காப்பீடு நிறுவனத்திற்கு வழங்கிடுவதற்கான கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது. மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய 8.59 கோடி ரூபாய் காப்பீடு நிறுமனம் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்பட்டு இம்மாத இறுதிக்குள் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்.
2024-25 கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் 80 கிராம பஞ்சாயத்துகளில், தரிசு நிலங்களின் அடிப்படையில் தரிசு நில தொகுப்புகள் அமைக்கவும், தனி நபர் தரிசு நிலத்தில் மானியத்தில் முட்புதர் அகற்றி விவசாயம் செய்யப்பட்டுள்ளது. 2024-25 முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரம் தக்கைப்பூண்டு விதைகள் 750 விவசாயிகளுக்கு விதை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
வேப்பங்கன்று விநியோகம் ஒரு விவசயாயிக்கு அதிகபட்சமாக 1000 கன்றுகள் என்ற விகிதத்தில் 25000 வேப்பங்கன்றுகள் முழு மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆடாதொடா, நொச்சி கன்று விநியோகம் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 கன்றுகள் என்ற விகிதத்தில் 70000 கன்றுகள் முழு மானியத்தில் 1400 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2024-25 உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்க திட்டத்தின் கீழ் உளுந்து, பாசி, சிறு தானியவிதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
துரமான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் மற்றும் உயிரியியல் காரணிகள் 50 சதவீத மானியத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது. பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம் மூலம் 2024-25-ம் ஆண்டில் வேளாண்மைத்துறைக்கு 450 எக்டர் பரப்பளவில் ரூ.220 இலட்சத்திற்கு நுண்ணீர்ப் பாசன இலக்கு பெறப்பட்டுள்ளது. 390 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனம் அமைக்க 386 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இதில் 288 எக்டர் பரப்பளவிற்கு பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
2024-25-ம் ஆண்டில் தோட்டக்கலைத்துறைக்கு 800 எக்டர் பரப்பளவில் ரூ.500 இலட்சத்திற்கு நுண்ணீர்ப் பாசன இலக்கு பெறப்பட்டுள்ளது. 567.77 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனம் அமைக்க 519 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க சிறு/குறு விவசாயிகளுக்கு 100மூ மானியமும் ஏனையோருக்கு 75மூ மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி விண்ணப்பித்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023 டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட மணல் படிவுகளை வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களைக் கொண்டு தற்போது வரை 1229.443 எக்டேர் பரப்பளவு நிலங்களில் மணல் படிவுகள் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. வேளாண்மை இயந்திரமயமாக்குல் திட்டத்தில் 2024-25ம் நிதியாண்டிற்கான 2ம் தவணை நிதியில் தனிநபர் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.34.41 இலட்சம் மானியத்தில் 28 எண்கள் இயந்திரங்கள் ஒதுக்கீடு வரப்பெற்று ரூ.19.72 இலட்சம் மானியத்தில் 27 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சரின் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட் அமைத்துக் கொடுக்கும் திட்டம் 2024-25ல் 32 எண்கள் இலக்கு வரப்பெற்று, 32 எண்களுக்கும் வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 10 எண்களுக்கு நிறுவு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 2 எண்களுக்கான நிறுவு பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.11.74 இலட்சம் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. சூரியசக்தி கூடார உலர்த்தி அமைக்கும் திட்டம் 2024-25-ன் கீழ் சூரியசக்தி கூடார உலர்த்தி அமைக்கும் திட்டத்தில் 3 எண்களுக்கு ரூ.6.43 இலட்சம் மானியம் ஒதுக்கீடு வரப்பெற்று, 2 பணிகள் முடிந்து ரூ.4.35 இலட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 நிறுவு பணி நடைபெற்று வருகிறது.
மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட் வழங்கும் திட்டம் 2024-25ம் நிதியாண்டில் 90 எண்கள் ரூ.13.50 இலட்சம் மானியம் ஒதுக்கீடு வரப்பெற்று, 22 எண்களுக்கு வேலை உத்தரவு வழங்கப்பட்டு, 6 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 6 எண்களுக்கு ரூ.89,370/- மானியம் வழங்கப்பட்டுள்ளது. 2024-25ம் 2024-25ம் நிதியாண்டில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத் திட்டத்தில் மொத்தம் 145.00 எக்டேர் பரப்பளவு உழவு மேற்கொள்ள இலக்கு மற்றும் ரூ. 7.83 இலட்சம் நிதி ஒதுக்கீடு வரப்பெற்று 20.75 எக்டேர் பரப்பளவு உழவு மேற்கொள்ள விவசாய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, 16.71 எக்டேரில் பணிகள் முடிக்கப்பட்டு ரூ.90,000/ மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 9 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள வேளாண் சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் மற்றும் திருவைகுண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள வாழை பழுக்க வைக்கும் கூடம் ஆகியவற்றினை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுவதுடன் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமிக்கப்படும் விளைபொருட்களுக்கு பொருளீட்டுக் கடன் பெற்றுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் விநியோக தொடர் சேவைகள், கிடங்குகள், சிப்பம் கட்டும் கூடங்கள், ஆய்வுக்கூடங்கள், குளிர்பதன தொடர் சேவைகள், தளவாட வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள், சுத்தம் செய்தல், உலர்த்துதல், வகைப்படுத்துதல், தரம்பிரித்தல், மின்னணு சந்தையுடன் கூடிய விநியோகத் தொடர், சூரிய மின் சக்தியுடன் கூடிய உட்கட்டமைப்பு, பழுக்க வைக்கும் அறைகள் போன்றவற்றை அமைக்க விரும்பும் பயனாளிகளுக்கு 3% வட்டி சலுகை வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அளிக்கப்படும். இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையினை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விலை ஆதரவு திட்டத்தின் கீழ் தற்போது மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அரவைக் கொப்பரை குறைந்தபட்ச ஆதார விலையின் அடிப்படையில் கிலோ ஒன்றுக்கு ரூ.111.60 என்ற விலையில் டிசம்பர் 2024 வரை கொள்முதல் செய்யப்பட உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் சாத்தான்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தங்கள் விளைபொருளை பதிவு செய்து விற்பனை செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உளுந்து குறைந்தபட்ச ஆதாரவிலையின் அடிப்படையில் கிலோ ஒன்றுக்கு ரூ.74 வீதம் தூத்துக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 23.12.2024 வரை கொள்முதல் செய்யப்பட உள்ளது. எனவே விவசாயிகள் தூத்துக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தங்கள் விளைபொருளை பதிவு செய்து விற்பனை செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
e-Nam மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் பண்ணை வாயில் வழியாக தேசிய அளவில் ந-யேஅ முறையில் நல்ல விலைக்கு விளைபொருட்களை விற்பனை செய்து அதிக லாபம் பெற கேட்டு கொள்ளப்படுகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 18.11.2024 வரை ரூ.140.21 கோடிக்கு 12728 விவசாயிகளுக்கு விவசாய பயிர் கடனாக கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 9339 சிறு/குறு விவசாயிகளுக்கு ரூ.103.38 கோடி விவசாய பயிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், இணை பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) ராஜேஷ், இணை இயக்குநர் (வேளாண்மை) (பொ) மனோரஞ்சிதம், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.