» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்து: முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்கு !
புதன் 20, நவம்பர் 2024 8:26:53 AM (IST)
கோவில்பட்டி அருகே மது போதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய முன்னாள் ராணுவவீரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி நரிப்பையூரை சேர்ந்தவர் ஜைனுலாதின் மகன் பைரோஸ் கான் (38). வியாபாரி. இவர் தூத்துக்குடியில் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வேலை நிமித்தமாக கோவில்பட்டிக்கு வந்துவிட்டு, தனது நண்பர்களுடன் தூத்துக்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
இரவு 9 மணியளவில் கோவில்பட்டி- திட்டங்குளம் பகுதியில் சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார், இவரது கார் மீது மோதியது. இந்த விபத்தில் 2 கார்களும் பலத்த சேதமடைந்தன. ஆனால் கார்களில் இருந்தவர்கள் காயமின்றி தப்பினர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ெசன்று விசாரணை நடத்தினர்.
விபத்தை ஏற்படுத்தியவர் காரில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். போலீசார் அவரை காரில் இருந்து இறக்கியபோது, மதுபோதையில் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கோவில்பட்டி அருகேயுள்ள செமப்புதூரை சேர்ந்த துரைராஜ் மகன் சூரிய நாராயணன் (44). முன்னாள் ராணுவவீரரான இவர் கோவில்பட்டிக்கு வந்து அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு, போதையில் அதிவேகமாக காரை ஓட்டிச்சென்று முன்னால் சென்ற கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
காரில் இருந்து வெளியே வரமறுத்த அவரை போலீசார் வலுக்கட்டாயமாக கீழே இறக்கியுள்ளனர். மது போதையில் இருந்த நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சூரியநாராயணன் மீது கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.