» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாலையை சீரமைக்க வலியுறுத்தி மறியல் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு!
திங்கள் 18, நவம்பர் 2024 12:58:57 PM (IST)
கோவில்பட்டி அருகே பூசாரிபட்டி கிராமத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதி பூசாரிபட்டி. இந்த கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் அந்த கிராமத்திலிருந்து மெயின் சாலைக்கு செல்லக்கூடிய சாலை மிகவும் பழுதடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த கிராம மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
சாலை சேதமடைந்து காணப்படுவதால் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. ஆட்டோ, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வாகனங்களும் உள்ளே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சேதமடைந்த சாலைகளில் மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்கி இருப்பதால் தொற்று நோய்கள் ஏற்பட்டு வருவதாகவும், இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று கடந்த 4 மாதங்களாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி - கடலையூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறை மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.