» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மூக்கரைக்கல் தரைப்பாலம் சீரமைப்பு : ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!
வியாழன் 7, நவம்பர் 2024 12:46:31 PM (IST)
மூக்கரைக்கல் பகுதியில் சரிசெய்யப்பட்ட தரைப்பாலத்தினை குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் கடையால் பேரூராட்சிக்குட்பட்ட மூக்கரைக்கல் சரிசெய்யப்பட்ட தரைப்பாலத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் "கடையால் பேரூராட்சிக்குட்பட்ட பேச்சிப்பாறையிலிருந்து மோதிரமலை செல்லும் சாலையில் மூக்கரைக்கல் பகுதியில் அமைந்துள்ள தரைப்பாலம் மழையின் காரணமாக சேதமடைந்தது.
மேற்படி சாலையானது மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் கோதையாறு, குற்றியாறு, மோதிரமலைகளை இணைக்கிறது. இச்சாலை பழுதடைந்து அரசு பஸ் திரும்ப இயலாதநிலை உருவாகி மக்கள் போக்குவரத்து தடைப்பட்டது. எனவே போக்குவரத்து தடைபட்டுள்ளதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் மாற்று ஏற்பாடாக மினிபஸ், வேன்கள் ஏற்பாடு செய்து மலைப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயணம் செய்திட ஏற்பாடுகள் செய்யுமாறு போக்குவரத்துக்கழக பொதுமேலாளருக்கு உத்தரவிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நேற்று பழுதடைந்த மூக்கரைக்கல் பகுதியில் உள்ள தரைப்பாலம் சீர் செய்யப்பட்டது. சரிசெய்யப்பட்ட தரைப்பாலம் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, நிரந்தர தீர்வுக்காண துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். ஆய்வில் போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி, வணிக மேலாளர் ஜெரோலின் லிஸ்பன் சிங் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.