» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கழுகாசலமூர்த்தி கோவிலில் தாரகாசூரன் சம்ஹாரம்

வியாழன் 7, நவம்பர் 2024 9:05:20 AM (IST)



கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நேற்று தாரகாசூரன் சம்ஹாரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று சூரசம்ஹாரம் நடக்கிறது.

தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

விழாவின் 5-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடந்தது. காலை 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி வெள்ளி சப்பரத்தில் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மதியம் 12 மணிக்கு கோவில் மேலவாசல் மைதானத்தில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து வீரபாகுதேவர் மும்முறை தூது சென்ற பின்னரும் சூரபத்மனின் தம்பியான தாரகாசூரன் அடிபணிய மறுத்துவிடுகிறார். இதை தொடர்ந்து தாரகாசூரனுடன் போருக்கு முருகப்பெருமான் தயார் ஆகிறார். இந்த நிகழ்ச்சியில் தாரகாசூரனாக வேடமணிந்த பக்தர் ஒருவர் முருகப்பெருமானுடன் போருக்கு தயாராக நிற்க வைக்கப்பட்டார். 

தொடர்ந்து முருகப்பெருமானிடம் இருந்து வேலை பெற்று வந்து தாரகாசூரனாக வேடமணிந்திருப்பவரின் மீது குத்துவது போன்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தாரகாசூரன் இறந்து விடுவது போன்றும், அவரை பக்தர்கள் தூக்கி செல்வது போன்றும் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ‘முருகா..முருகா’ கோஷம் எழுப்பினர். இந்த நிகழ்வு கழுகுமலை திருத்தலத்தில் மட்டுமே நடைபெறுவது சிறப்பம்சமாகும். 

தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், பவுர்ணமி கிரிவல குழு தலைவர் மாரியப்பன், பிரதோஷ குழு தலைவர் முருகன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி அன்னம் வாகனத்தில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று (வியாழக்கிழமை) முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, காலை 6 மணிக்கு காலசந்தி பூஜைகள் நடைபெறும். காலை 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி பல்லக்கிலும், வள்ளி, தெய்வானை பூஞ்சப்பரத்திலும் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. 

மதியம் 12 மணிக்கு சண்முகர் அர்ச்சனை வழிபாடு நடக்கிறது. மாலை 3 மணியளவில் சுவாமி வீரவேல் ஏந்தி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி போர்க்களத்திற்கு வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து 4 மணியளவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணியளவில் கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. வருகிற 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியளவில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors






Thoothukudi Business Directory