» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூய்மை பணியாளர்கள் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் : தூத்துக்குடியில் பரபரப்பு!
செவ்வாய் 5, நவம்பர் 2024 12:02:18 PM (IST)
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ், சுமார் 1,500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி தூய்மைப் பணியாளர்களுக்கு தினக் கூலியாக ரூ.725, ஓட்டுநர்களுக்கு ரூ.763, டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு ரூ.725 வழங்க வேண்டும், தூய்மை பணியில் கான்ட்ராக்ட் முறையை ரத்து செய்துவிட்டு தூய்மை பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தூய்மை ஓட்டுனர்கள், பணியாளர்களுக்கும் சுழற்சி முறையில் வார விடுப்பு வழங்க வேண்டும். ஓட்டுனர்களுக்கு 2 செட் சீருடை சேலையும், 2 செட் காலனியும் உபகரணங்களும் வழங்க வேண்டும். தூய்மை தொழிலாளர்கள் மீதான வர்க்க, சாதிய, பாலியல் ரீதியான ஒடுக்கு முறைகளை முறியடிக்க, நிரந்தரமான பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோரிக்கைகளை தமிழக அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்ற வலியுறுத்தி தூய்மை பாரத இயக்கம் ஓட்டுனர் - தூய்மை பணியாளர்கள் நல சங்கம், மற்றும் ஏஐசிசிடியூ தொழிற்சங்கம் சார்பில் சார்பில் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து, தூத்துக்குடி - பாளை மெயின் ரோடு, சிக்னல் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஓட்டுனர் மற்றும் தூய்மை பணியாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.