» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஊட்டச்சத்து மாத விழா: அமைச்சர் பி.கீதா ஜீவன் துவக்கி வைத்தார்!

சனி 21, செப்டம்பர் 2024 4:53:49 PM (IST)



தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து மாத விழாவை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் துவக்கி வைத்தார். 

தூத்துக்குடியில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து மாத விழா 2024னை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் இன்று (21.09.2024), குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்ததாவது: ஊட்டச்சத்து மாத விழா 2024 நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நல்ல முறையில் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் இங்கு போடப்பட்டிருக்கும் கோலங்கள், அரங்கின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு தானிய உணவு வகைகள் ஆகியவை சிறப்பாக தயார் செய்து வந்துள்ளார்கள். அனைத்தும் நல்ல முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மிக விளக்கமாக நமது பெண்களுக்கு தேவையான விபரங்களை தெளிவாக எடுத்துக்கூறினார்கள்.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்பட்டு, காலத்திற்கு ஏற்றார்போல் ஒரு தாயுமானவர்களையும், பாலூட்டும் தாய்மார்களையும், கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளையும் நல்ல முறையில் வளர்க்கக்கூடிய பெண்களுக்கும் பல நல்ல உதவிகளை செய்து வருகிறார்கள். இந்த துறையானது விழிப்புணர்வு என்பதை உருவாக்கிகொண்டே இருக்க வேண்டும். மிக முக்கியமாக எதிர்கால சமூதாயத்தை உருவாக்கக்கூடியவர்கள், இளம் தாய்மார்கள், கர்ப்பிணிதாய்மார்களுக்கு நாம் அறிவுரைகளை அறிவுருத்தி கொண்டே இருக்க வேண்டும். பணிபுரியும் பெண்களுக்கு குழந்தைகளை வளர்ப்பது என்பது ஒரு பெரிய கஷ்டமாக தான் இருக்கும்.

மேலும், கனவர் வேலைக்கு செல்லும் போது குழந்தைகளின் முழு பொறுப்பும் இல்லத்தரசிகளின் கையில் தான் இருக்கிறது. ஒரு குழந்தையின் வளர்ச்சி என்பது கரு உருவான நாள் முதல் குழந்தைக்கு இரண்டு வயது முடியும் வரை உள்ளது. கரு உருவாகும் போது நல்ல சத்தாண உணவை தாய் உட்கொள்ளும் போது குழந்தை ஆரோக்கியமாக வளரும். குழந்தை பிறந்த பிறகு நல்ல சத்தாண உணவை அந்த குழந்தைக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். ஆறு மாதம் வரை தாய் பால் கட்டாயம் கொடுக்க வேண்டும்.

ஆறு மாதத்திற்கு பிறகு கீரை சாதம், பருப்பு சாதம், நெய் சாதம், உருளைக்கிழங்கு, தானிய வகை உணவுகள் அனைத்தும் குழந்தைகளுக்கு கொடுத்து வர வேண்டும். இரண்டு வயது ஆகும் போது வளரும் குழந்தைகளுக்கு அறுபது சதவீத மூளை வளர்ச்சி அடைந்து விடும். ஆகவே நல்ல மூளை வளர்ச்சி உள்ள குழந்தை, ஆரோக்கியமான குழந்தை, அறிவாற்றல் மிக்க ஒரு குழந்தையாக திகழ வேண்டும் என்றால் நிச்சயமாக இரண்டு வயது வரைக்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

மிக முக்கியமான நாட்கள் இந்த ஆயிரம் நாட்கள். அதற்கு மேலும் நம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கொடுக்க வேண்டும். முக்கியமாக வயதிற்கு வந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கொடுத்தாக வேண்டும். தானிய வகைகள், நல்லெண்ணெய், பேரிச்சம் பழம், நெல்லிக்காய், மாதுழம் பழம், முருங்கை கீரை, அரைக் கீரை, பாலக்கீரை இந்த மாதிரி சத்தான உணவு கொடுக்கும் போது ஆரோக்கியமாகவும், நோய் எதிப்பு சக்தி உருவாகும், எளிதில் எந்த நோயும் நம்மை அண்டாது. தொடர்ச்pயாக நாம் வாழ்க்கையில் அதை கடைபிடிக்கும் போது நல்ல ஆரோக்கியமாக இருப்போம்.

பெண்கள் கட்டாயம் நல்ல முறையில் நல்ல உணவை சாப்பிட வேண்டும். இங்கு வந்திருக்கும் அனைவரும் இந்த ஆயிரம் நாட்களுடைய முக்கித்துவத்தையும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். மருத்துவரிடம் குழந்தைகளை அழைத்து செல்லும் போது வயதிற்கு ஏற்ற உயரத்தில் இருக்கிறார்களா, வயதிற்கேற்ற எடை இருக்கிறதா, உயரத்திற்கேற்ற எடை இருக்கிறார்களா என்பதை கேட்டு நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, ‘கர்ப்பிணி பெண்களுக்கான 1000 நாட்கள் மற்றும் இரத்த சோகை” என்ற தலைப்பில் நடைபெற்ற கோலப் போட்டியினையும், சிறுதானிய உணவு கண்காட்சியினையும் பார்வையிட்டு, கோலப்போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கும், ‘சிறுதானிய உணவு” என்ற தலைப்பில் நடைபெற்ற சமையல்போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பரிசுகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், மாவட்ட திட்ட அலுவலர் (மு.கூ.பொ.,) ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மு.காயத்ரி, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ரூபி பெர்னாண்டோ, கிழக்கு மண்டல தலைவர் தி.கலையரசி, மாமன்ற உறுப்பினர்கள் ச.சரண்யா ராஜ்குமார், பவானி மார்ஷல், ராமு அம்மாள், மரிய கீதா மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory