» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பகுதி நேர வேலை மோசடி : ரூ.3.23லட்சம் பணத்தை மீட்ட சைபர் கிரைம் போலீஸ்!

வெள்ளி 20, செப்டம்பர் 2024 3:41:50 PM (IST)

தூத்துக்குடியில் இணையதளத்தில் பகுதி நேர வேலை என்று கூறி ரூ.21 லட்சம் பணம் மோசடி செய்த வழக்கில் ரூ.3.23லட்சம் பணத்தை மீட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் பாராட்டு தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இணையதளத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு என்று மர்ம நபர்கள் மூலம் டெலிகிராம் செயலியில் லிங்க் வந்துள்ளது. இதனையடுத்து அந்த இளைஞர் அந்த லிங்க்-ஐ கிளிக் செய்து அதில் கூறப்பட்டுள்ள இணையதளத்தில் முதலீடு செய்து அதன் மூலம் சிறிய தொகையை லாபமாக பெற்றுள்ளார்.

இதனையடுத்து அதிக மூதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று தொடர்ந்து அந்த மர்மநபர்கள் கூறியதையடுத்து அதனை நம்பி மேற்படி இளைஞர் பல்வேறு தவணைகளாக  கூறிய 16 வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூபாய் 21,07000/- பணத்தை அனுப்பி உள்ளார். இதனையடுத்து மேற்படி இளைஞர் முதலீடு செய்த பணத்திற்கு லாபம் வரவில்லை என்று அந்த மர்ம நபர்களிடம் தொடர்பு கொண்டபோது  கூடுதலாக 15 லட்சம் பணத்தை கட்டினால் மொத்தமாக லாபம் பெறலாம் என்று கூறியுள்ளனர்.
 
பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த மேற்படி இளைஞர் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். மேற்படி இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  சகாய ஜோஸ்  மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் (பொறுப்பு)  சோமசுந்தரம் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்த எதிரிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு மேற்படி பாதிக்கப்பட்ட இளைஞர் அனுப்பிய எதிரிகளின் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.28,22,141 மோசடி பணத்தை முடக்கம் (Freeze) செய்து நீதிமன்ற உத்தரவுப்படி மேற்படி முடக்கம் (Freeze) செய்த பணத்தில் ரூ.3,23,000  பணத்தை பாதிக்கப்பட்ட இளைஞரின் வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மீதி பணத்தை மீட்கவும் எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்யவும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் சட்டரீதியாக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று பகுதி நேர வேலை, ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம், ஸ்டார் ரேட்டிங் கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று இணையதளம், வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்றவற்றின் மூலம் வரும் போலியான விளம்பரங்களை நம்பி அதில் வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும், இளைஞர்கள் பெண்கள் ஆகியோர் இதுபோன்ற போலியான விளம்பரங்களை தவிர்த்து சைபர் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்  பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory