» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செப்.18ல் உயர்வுக்குப்படி வழிகாட்டல் நிகழ்ச்சி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!

திங்கள் 16, செப்டம்பர் 2024 4:21:41 PM (IST)

திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் வருகிற 18ஆம் தேதி "உயர்வுக்குப்படி வழிகாட்டல்" நிகழ்ச்சி  நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் "நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 2022-2023 மற்றும் 2023-2024-ம் கல்வி ஆண்டுகளில் 12-ஆம் வகுப்பு பயின்று பள்ளி இறுதி தேர்வு எழுதாதவர்கள், தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வில் வெற்றி பெற்று உயர்கல்வி பெற கல்லூரிகளில் சேராதவர்கள் மற்றும் 8 முதல் 12-ஆம் வகுப்பில் பயிலும் போது இடைநின்ற மாணவர்களுக்கான "உயர்வுக்குப்படி” வழிகாட்டல் நிகழ்ச்சியானது 18.09.2024 அன்று தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது.

அறிவியல் மற்றும் கலை கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவை கலந்து கொண்டு உயர்கல்வி தொடர்பான வழிகாட்டல்களையும், தங்கள் கல்வி நிலையங்களுக்கான மாணவர் சேர்க்கையையும் மேற்கொள்ள உள்ளனர். மேலும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், சமூகநலத்துறை அலுவலர் ஆகியோர் உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு தமிழக அரசின் தமிழ்ப்புதல்வன் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகள், கல்வி உதவித்தொகை மற்றும் உறைவிட வசதி குறித்த விவரங்களை தெரிவித்து மாணவர்களுக்கு உதவி செய்ய உள்ளனர்.

வங்கிகளில் இருந்து கல்விக்கடன் தேவைப்படும் மாணவர்களுக்கு வங்கிக்கடன் வழங்க முன்னோடி வங்கி மேலாளர் தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வார். பள்ளி கல்வியில் இடைநின்ற மாணவர்களுக்கு சான்றிதழுடன் கூடிய குறுகிய கால தொழிற்பயிற்சி, தொழில்முனைவோராக உருவாக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி, குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை திறன் மேம்பாட்டுத் துறை அலுவலர்கள் வழங்க உள்ளனர்.

எனவே இந்த வாய்ப்பினை படிப்பை(கல்வியை) பாதியில் கைவிட்ட மற்றும் உயர்கல்வி நாடும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory