» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நில ஆக்கிரமிப்பை கண்டித்து விஷம் குடித்த பெண் : உறவினர்கள் போராட்டம்!
வெள்ளி 13, செப்டம்பர் 2024 8:27:48 AM (IST)
கயத்தாறு அருகே நில ஆக்கிரமிப்பை கண்டித்து பெண் விஷம் குடித்தார். அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தில் தனியார் சோலார் நிறுவனம் அமைய இருக்கிறது. இதற்காக சிலரிடம் விளை நிலங்களை வாங்கிக்கொண்டு, அருகில் உள்ள தனிநபர் பட்டா இடங்களையும் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது.
அதுபோல் அதே ஊரைச் சேர்ந்த வெயிலுமுத்துவின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, பணிகளை தொடங்க ஆயத்தமானதாக கூறப்படுகிறது. இதையறிந்த வெயிலுமுத்துவின் மனைவி விவசாய தொழிலாளியான வடிவம்மாள் (35) நேற்று அங்கு வந்து, ஊழியர்களிடம் கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த வடிவம்மாள் அங்கேயே விஷம் குடித்து மயங்கினார். இதை அறிந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வடிவம்மாளை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று காலையில் வடிவம்மாளின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு நிலத்தை விட்டு தனியார் நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அப்போது, வடிவம்மாளின் சகோதரியான காளியம்மாள் என்பவர் மண்எண்ணெய் கேனுடன் அங்கு வந்தார்.
இதை பார்த்த அங்கிருந்தவர்கள் கேனை பிடுங்கிப்போட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.