» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விடுதியில் ஃப்ரிட்ஜ் வெடித்து 2 ஆசிரியைகள் பலி: மாணவி உள்பட 3 பேர் தீக்காயம்!

வெள்ளி 13, செப்டம்பர் 2024 8:20:03 AM (IST)



மதுரையில் பெண்கள் விடுதியில் ஃப்ரிட்ஜ் வெடித்து தீப்பிடித்ததில் தூத்துக்குடியை சேர்ந்த 2 ஆசிரியைகள் பரிதாபமாக இறந்தனர். மாணவி உள்பட 3 பேர் தீக்காயம் அடைந்தனர்.

மதுரை மாநகரின் மையப்பகுதியில் பெரியார் பஸ் நிலையம் அமைந்து இருக்கிறது. பெரியார் பஸ் நிலையத்தின் அருகே கட்ராபாளையம் தெருப் பகுதியில் தனியார் பெண்கள் விடுதி ஒன்று இருக்கிறது. இதில் கீழ் பகுதியில் மருத்துவமனை, மருந்தகம், அடுத்தடுத்து கடைகள் உள்ளன. முதல் மற்றும் 2-வது தளத்தில் 20-க்கும் மேற்பட்ட தங்கும் அறைகள் உள்ளன. 

இங்கு மதுரை மட்டுமின்றி சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள், மாணவிகள் தங்கி இருந்து வேலை செய்தும், கல்லூரிகளில் படித்தும் வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு சுமார் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் அறைகளில் தூங்கிக்கொண்டு இருந்தனர். 

அதிகாலை 4.30 மணி அளவில் திடீரென அந்த விடுதியின் ஒரு அறையில் இருந்த பிரிட்ஜில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. உடனே தீப்பிடித்து அங்கிருந்த பொருட்கள் மீது பரவியது. மிகவும் குறுகலான அறைகள் என்பதால், அடுத்தடுத்த அறைகளுக்கும் கண் இமைக்கும் நேரத்தில் தீ பரவியது. பெருமளவில் கரும்புகை சூழ்ந்தது.

அறைகளில் தூங்கிக்கொண்டிருந்த பெண்கள், மாணவிகள் அலறியடித்து எழுந்தனர். கிடைத்ததை எடுத்துக்கொண்டு அறைகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். ஆனால் பலர் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். சம்பவத்தை அறிந்து அருகில் உள்ள திடீர்நகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயில் சிக்கியவர்களை ஒவ்வொருவராக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

ஆனால், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா குரங்கணி பகுதியை சேர்ந்த சிங்கத்துரை என்பவருடைய மனைவி பரிமளா (55), எட்டயபுரம் தாலுகா சிங்கிலிபட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் சரண்யா (27) ஆகியோர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பிணமாக கிடந்தது தெரியவந்தது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

போலீசார் விசாரணையில் சரண்யா, மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆசிரியையாகவும், பரிமளா மதுரை வாடிப்பட்டி தாலுகா இரும்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வந்தனர். பரிமளாவின் கணவர், ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை என்பது தெரியவந்தது. 

இச்சம்பவத்தில் காயம் அடைந்த மேலூரை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி ஜனனி (17), பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த விடுதி வார்டன் புஷ்பா (58), விடுதி சமையலர் கனி (62) ஆகிய 3 பேர் பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் வார்டன் புஷ்பாவுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. 

விபத்தை அறிந்து கலெக்டர் சங்கீதா நேரில் சென்று ஆய்வு செய்தார். தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். விபத்து நடந்த விடுதியின் அருகே பள்ளிவாசல் உள்ளது. அதிகாலை 4.30 மணிக்கு பயங்கர சத்தத்துடன் விபத்து நடந்ததால், அந்த நேரத்தில் தொழுகைக்காக வந்திருந்த முஸ்லிம்கள், கடைக்காரர்கள் சம்பவத்தை பார்த்துள்ளனர். உடனடியாக அவர்கள்தான் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். 

மேலும், புகையில் இருந்து மீட்கப்பட்ட மாணவிகளை அருகில் உள்ள பள்ளிவாசலில் தங்க வைத்தனர். அங்கு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். அதன்பின்னர் தான், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட மண்டபத்துக்கு மாணவிகள் சென்றனர். மாணவிகளுக்கு உதவியர்களின் மனிதநேயத்தை பலரும் பாராட்டினர்.

பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மீட்கப்பட்டு, ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த பெண்களையும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களையும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தீ விபத்தில் காயம் அடைந்து சிகிச்சையில் இருப்பவர்களை, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறுகையில், ‘இந்த சம்பவத்திற்கு அதிகாரிகளே காரணம். மாநகராட்சியின் மெத்தனப்போக்கால் 2 பெண்கள் இறந்துவிட்டனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கே ரூ.10 லட்சம் வழங்கும் நிலையில், மதுரை தீ விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Arputham Hospital






Thoothukudi Business Directory