» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம் : ஆட்சியர் நலதிட்ட உதவிகள் வழங்கினார்!
செவ்வாய் 11, ஜூன் 2024 4:22:13 PM (IST)
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் இன்று(11.06.2024) நடைபெற்றது.
இதில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்கள். மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவு ஆணைகளை வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, வழங்கினார்;கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த நிதியாண்டிற்கான 1433-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 11.06.2024 முதல் 14.06.2024 வரை மற்றும் 18.06.2024 முதல் 21.06.2024 வரை என 10 வட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்த வருவாய் தீர்வாயத்தின் போது கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான வேளாண் நிலத்தின் உடமைப் பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தான விவரங்கள் கேட்டு மனுக்கள் தரலாம். தங்கள் கிராமத்தில் உள்ள குறைகளை நீக்க முறையிடலாம். கல்வி, குடிநீர், நீர் பாசன வாய்க்கால், மயான வசதி, கழிவு நீர் சாக்கடை வசதி முதலிய தேவைகள் குறித்தும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் முறையிடலாம். சொந்த வீட்டு மனை இல்லாதவர்கள் இலவச மனை பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம்.
வீட்டு மனை மட்டும் உடையவர்கள் வீடு கட்ட அரசு கடன் மற்றும் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம். கிராம மக்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர் ஒய்வூதியம், இலவச அரசு காப்புறுதி அட்டை, வறட்சி நிவாரண நிதி கோருதல், நிலப் பட்டா மாற்றம், நிலப்பட்டா சர்வே எண்கள் மாற்றங்கள் தொடர்பாக வருவாய் தீர்வாயத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்படும்.
எட்டயபுரம் வட்டத்தில் 11.06.2024 முதல் 21.06.2024 வரை மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், ஏரல் வட்டத்தில் 11.06.2024 முதல் 20.06.2024 வரை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், திருவைகுண்டம் வட்டத்தில் 11.06.2024 முதல் 19.06.2024 வரை தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், சாத்தான்குளம் வட்டத்தில் 11.06.2024 முதல் 14.06.2024 வரை திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், விளாத்திகுளம் வட்டத்தில் 11.06.2024 முதல் 21.06.2024 வரை கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும்,
திருச்செந்தூர் வட்டத்தில் 11.06.2024 முதல் 18.06.2024 வரை மாவட்ட வருவாய் அலுவலர் (இஸ்ரோ) தலைமையிலும், கயத்தார் வட்டத்தில் 11.06.2024 முதல் 21.06.2024 வரை உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும், தூத்துக்குடி வட்டத்தில் 11.06.2024 முதல் 18.06.2024 வரை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், கோவில்பட்டி வட்டத்தில் 11.06.2024 முதல் 18.06.2024 வரை தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தலைமையிலும், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் 11.06.2024 முதல் 21.06.2024 வரை தனித்துணை ஆட்சியர் (இஸ்ரோ) தலைமையிலும் நடைபெற்று வருகிறது.
இந்த ஜமாபந்தியின் நோக்கமானது வருவாய் / கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். மேலும், பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு இறுதி நாளன்று பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் மற்றும் ஆணைகள் வழங்கப்படும்.
எனவே, பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி, தங்களது கிராமத்திற்கான ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களது மனுக்களை வழங்கி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம் என வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், எட்டயபுரம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.