» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டீ மாஸ்டரை தாக்கிய ஜவுளி வியாபாரி கைது!
புதன் 15, மே 2024 10:57:04 AM (IST)
திருச்செந்தூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் டீ மாஸ்டரை தாக்கிய ஜவுளி வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம், ஆவரைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ் மகன் ஜெய செல்வம் அன்னராஜ் (53), இவர் திருச்செந்தூரில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். திருப்பூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் வேல்துரை மகன் செல்வம் (36) என்பவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் திருச்செந்தூருக்கு அடிக்கடி வந்து செல்வாராம். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் மது குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வம், ஜெய செல்வம் அன்னராஜை சாக்கடைக்குள் தள்ளி விட்டாராம். இதில் காயம் அடைந்த அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.