» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஆட்சியர் லட்சுமிபதி, அமைச்சர் கீதாஜீவன் வாக்களிப்பு!!
வெள்ளி 19, ஏப்ரல் 2024 10:15:35 AM (IST)
தூத்துக்குடியில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டோர் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் - சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று வாக்கு செலுத்தி தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
அவருடன் கணவர் ஜீவன் ஜேக்கப். மகன் மகிழ் ஜான் மற்றும் குடும்பத்தினர்கள் வாக்கை பதிவு செய்தனர். இதுபோல் தங்கம்மாள் மேல்நிலைப் பள்ளியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தனது மகன் அஜித் பெரிசன் உடன் சென்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். நாம் இந்தியர் கட்சி நிறுவனர் என்பி ராஜா தங்கம்மாள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
கடம்பூர் சிதம்பராபுரத்தில் இந்து துவக்கப் பள்ளியில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜ் வாக்களித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பண்டாரவிளையில் உள்ள இந்து நடுநிலைப் பள்ளியில் வாக்களித்தார்.
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, இராமச்சந்திராபுரத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், அவரது மனைவி ரெபேக்கா அனிட்டா மார்கண்டேயன் ஆகியோர் வாக்களித்தனர்.