» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி மக உற்சவ விழா தேரோட்டம் கோலாகலம்!
சனி 24, பிப்ரவரி 2024 10:11:38 AM (IST)
விளாத்திகுளம் அருகே குமரெட்டையாபுரம் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி மக உற்சவ விழாவையொட்டி தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குமரெட்டையாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மக உற்சவ விழா பிப்ரவரி 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கோவிலில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்று வந்தது.
இதனைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 4.30 மணியளவில் கோவிலின் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பால், தேன், திருநீறு, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மாலை 5 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் மூலவர் பாலசுப்பிரமணியசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இக்கோவிலுக்கு வந்த பக்தர்கள் "வெற்றிவேல்... வீரவேல்..." என்ற கோஷங்களுடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு ரதவீதிகளில் தேர் வலம் வந்து பின் கோவிலை வந்தடைந்தது. இந்த புகழ்பெற்ற தேர்த்திருவிழாவில் விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளியூரிலிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.