» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்திற்கு வஉசி பெயர் : தமிழக முதல்வருக்கு நன்றி!!

வியாழன் 24, ஆகஸ்ட் 2023 3:05:46 PM (IST)



கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் பெயரை சூட்டிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு கனிமொழி எம்பி நன்றி  தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பாரம்பரிய இரகங்களின் சாகுபடி - விற்பனை வாய்ப்புகள் மற்றும் பாரம்பரிய உணவு வகைகள் குறித்த வேளாண்மை கண்காட்சியினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று (24.08.2023) திறந்து வைத்து பார்வையிட்டு தெரிவித்ததாவது:

இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று விவசாயத்திற்கென தனி பட்ஜெட்டினை கொண்டு வந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் தான். அதேபோல் பட்ஜெட்டில் பனை மரங்கள் பாதுகாப்பிற்கான அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் தனது சுதந்திர தின உரையில், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியின் பெயரை கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரானார் அவர்களின் பெயரை சூட்டி இந்த பகுதி மக்களை பெருமைப்படுத்தி இருக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தொகுதி மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பனை, வாழை ஆராய்ச்சிக்கென தனியாக ஆராய்ச்சி மையத்தினை அமைத்து தந்துள்ளார். இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நமது அடுத்த கோரிக்கை, கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் என்பதுதான்.

இன்று அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் சிறுதானியங்கள், பாரம்பரிய நெல்வகைகள் இடம்பெற்றுள்ளன. பாரம்பரிய நெல்வகைகளில் ஆராய்ச்சி செய்து அதை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றம் செய்ய வேண்டும். பாரம்பரிய நெல் வகைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். குறைந்த காலத்தில் குறைந்த தண்ணீரில் விளையக்கூடிய பாரம்பரிய நெல்வகைகள் குறித்து ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதில் விரைவில் வெற்றி பெறுவோம். தொடர்ந்து ஆராய்ச்சி செய்வது என்பது மிகவும் முக்கியமான, இன்றியமையாத ஒன்றாகும்.

நீரிழிவு வந்தவுடன் அரிசி உணவை நிறுத்திவிட்டு, சப்பாத்தி சாப்பிட வேண்டும் என்று கூறும் நிலை இருந்தது. ஆனால் இப்போது மருத்துவர்கள் நம்முடைய பாரம்பரிய உணவு வகைகள்தான் நீரிழிவு நோயினை கட்டுப்படுத்துவதற்கு சிறந்தது என்று கூறுகிறார்கள். சோளம், வரகு, கம்பு, ராகி உள்ளிட்ட உணவு வகைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். நமது பாரம்பரிய சிறுதானியங்களை விளைவிக்க அதிக தண்ணீர் மற்றும் அதிக நாட்கள் தேவைப்படாது. 

பாராளுமன்றத்திலும் சிறுதானிய உணவு வகைகள் அதிகம் வழங்கப்படுகிறது. மேலும், உலகம் முழுவதும் தற்போது சிறுதானியங்களை அதிகம் வாங்குகிறார்கள். சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும், அதை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவது குறித்தும் இன்று கண்காட்சி அமைத்திருக்கிறார்கள். பழமையான விஷயங்களின் சிறப்பினை உணர்ந்து அதை அடுத்த காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றுவதுதான் ஆராய்ச்சி மையத்தின் முதல் கடமையாகும்.

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் இன்னும் அதிகமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாணவர்களை தன்னம்பிக்கையோடு உருவாக்கும் கடமை நமக்கு இருக்கிறது. ஆராய்ச்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறோமோ அதே அளவுக்கு மாணவர்களுக்கு புதுமையான விஷயங்களையும் கற்றுக்கொடுக்க வேண்டும். சந்திராயன் திட்டம் வெற்றி பெற்றபோது அந்த குழுவில் இருக்கும் விஞ்ஞானி தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது நமக்கு பெருமையாக இருக்கிறது. அதேபோல் இங்கிருக்கும் மாணவர்களும் மிகப்பெரிய விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும்.

சாத்தான்குளம் பகுதியில் வறட்சியினால் பாதிக்கப்படும் பனைமரங்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்படும். மேலும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தீ விபத்தில் சேதமடைந்த வாழைகள் கணக்கிடப்பட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து விவசாயத்திற்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தந்துகொண்டிருக்கிறார்கள் என  தெரிவித்தார்.



அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மறவன்மடம் ஊராட்சி அந்தோணியார்புரத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையினை திறந்து வைத்தார். பின்னர் அய்யனடைப்பு ஊராட்சி சோரீஸ்புரத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்திற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பாலசுப்பிரமணியன், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் தேரடிமணி, பனை ஆராய்ச்சி மைய சிறப்புஅலுவலர் சுவர்ணபிரியா, வேளாண்மை துணை இயக்குநர் மனோரஞ்சிதம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின்ராணி, வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) ஜென்கின் பிரபாகர், தோட்டக்கலை துணை இயக்குநர் சுந்தரராஜன், வேளாண்மை உதவி இயக்குநர் சுப்புலட்சுமி, பேராசிரியர் பாஸ்கர், இணை பேராசிரியர் மணிவண்ணன், உதவி பேராசிரியர் ஷோபா, மணக்கரை ஊராட்சி மன்றத்தலைவர் அருணாச்சலவடி, மற்றும் அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Arputham Hospital





Thoothukudi Business Directory