திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில், நவம்பர் 28-ஆம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" எனத் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் தளத்தில் வாழ்த்துப் பதிவிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் இடையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளது. மேலும், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு நீதிமன்ற அவமதிப்பு குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இத்துடன், கோவிலின் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்தும், கோவில் நிர்வாகத்தை ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோரிடம் ஒப்படைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பக்தர்கள் வரவேற்று வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" எனப் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் அவர் இந்த வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார்.