தமிழகத்தில் இருந்து கருங்கல் மற்றும் ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கனிமங்களை வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்ல தமிழக அரசு விதித்த தடையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உட்கட்டமைப்பு மற்றும் நகரமயமாக்கல் பணிகளுக்கான கருங்கல், ஜல்லிக்கற்கள் போன்ற கட்டுமானப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யவும், செயற்கை விலையேற்றத்தைத் தடுக்கவும் கடந்த ஜூலை மாதம் 'தமிழ்நாடு சட்டவிரோத கனிமச்சுரங்கம், கனிமப் போக்குவரத்து மற்றும் சேமிப்புத் தடுப்பு விதிகளில்' திருத்தம் செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் தவிர மற்ற மாநிலங்களுக்குக் கருங்கல், ஜல்லிக்கற்களைக் கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்குத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும், சாதாரண கற்கள், எம்.சாண்ட் (M-Sand) மற்றும் ஜல்லி உள்ளிட்ட கனிமங்களைப் பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதற்கான தடையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு கடந்த மாதம் 26-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், திருத்தப்பட்ட விதிகளைச் செல்லாது என அறிவிக்கக் கோரியும் மது பிரேமநாதன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், "திருத்தப்பட்ட விதிகளுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும். உரிய உரிமம் பெற்று எடுக்கப்பட்ட கனிமங்கள் தங்களுக்குச் சொந்தமானது என்பதால், அவற்றை எங்கு விற்க வேண்டும் என முடிவெடுக்க மனுதாரர்களுக்கு முழு உரிமை உள்ளது. எனவே, மூன்று மாதத் தடையை ரத்து செய்ய வேண்டும்" என வாதிடப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழ்நாடு சட்டவிரோத கனிமச்சுரங்கம், கனிமப் போக்குவரத்து மற்றும் சேமிப்புத் தடுப்பு விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என அறிவித்துத் தீர்ப்பளித்தனர்.
மேலும், அந்த விதிகளின் அடிப்படையில் கனிம வளங்களை வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்லத் தடை விதிக்க முடியாது எனக் கூறி, தமிழக அரசின் தடையை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

