அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்த புதுக்கோட்டை சி. விஜயபாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி மதிப்பிலான சொத்துக்களைக் குவித்த வழக்குத் தொடர்பாக, அவர் வரும் நவம்பர் 6-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2021-ஆம் ஆண்டு வரை சுகாதாரத்துறை அமைச்சராக சி. விஜயபாஸ்கர் பதவி வகித்தார். அவர் பதவி வகித்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்கள் வாங்கிச் சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் பல்வேறு புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில், கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள வீடுகள், அவரது சகோதரர், சகோதரி, உதவியாளர்கள், பினாமிகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒரே நேரத்தில் தனித்தனி குழுக்களாகச் சோதனை நடத்தினர்.
குறிப்பாக, விராலிமலை தொகுதியில் உள்ள இலுப்பூர் சவராஷ்டிரா தெருவில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, அவரது நண்பர் சுப்பையா, குபேந்திரன், பாண்டியன் வீடுகள் மற்றும் அவரது சகோதரர் உதயகுமாருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அமலாக்கத்துறை சம்மன்: லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கின் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறை இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்த தொடர்பாக விளக்கம் அளிக்க, வரும் 6-ஆம் தேதி சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் வரவுள்ள சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

