தூத்துக்குடி - நெல்லை நான்கு வழிச்சாலையில் மிக முக்கியப் பாலமாக விளங்கும் வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் மீண்டும் மிகப்பெரிய அளவில் ஓட்டை விழுந்துள்ளது வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இதே பாலத்தில் பெரிய அளவிலான ஓட்டை விழுந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் தற்காலிகமாகப் 'பேட்ச் ஒர்க்' செய்து சரிசெய்திருந்தனர். ஆனால், அப்பணிகள் தரமான முறையில் சரியாக மேற்கொள்ளப்படாததால், இன்று அந்த இடத்திற்கு அருகிலேயே மீண்டும் மிகப்பெரிய பள்ளம் மற்றும் ஓட்டை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி - நெல்லை இடையே நாள்தோறும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள், பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பயணிக்கும் இந்த பிரதான சாலையில், பாலத்தின் தற்போதைய நிலை பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் அதிவேகமாக வரும் வாகனங்கள் இந்த ஓட்டையில் சிக்கிப் பெரிய அளவிலான விபத்துகளில் சிக்கும் அபாயம் நீடிக்கிறது.

எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இந்த ஆபத்தான பாலத்தைப் பெயரளவில் மட்டும் தற்காலிகமாகச் சீரமைக்காமல், முழுமையாகத் தொழில்நுட்ப ஆய்வு செய்து நிரந்தரமாகவும் தரமான முறையிலும் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் வலுவாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.