மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, தொழுப்பேடு மற்றும் ஆத்தூர் அருகேயுள்ள திறந்தவெளி அரங்கில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது: "என்னுடைய தங்கை மரகதம் குமரவேலுக்கு வாக்களியுங்கள். நம்ம வீட்டுப் பெண்களைத் தவறாகப் பேசியவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். 108 தொகுதிகளில் வென்ற தவெக ஆட்சியமைக்கக் கூடாதா? திமுகவும் மற்றும் பலரும் சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சித்தார்களே, அந்த 'மற்றும் பலர்' இப்போது திமுகவின் கிளைக் கழகமாகவே மாறிவிட்டார்கள்.

ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து சாமானியன் ஆட்சிக்கு வரக் கூடாது என்றும், தமிழ்நாட்டில் அம்பேத்கர் மற்றும் அஞ்சலை அம்மாள் வழியில் ஆட்சி வந்துவிட்டால் ஊழல் செய்ய முடியாது என்றும்தான் மாறி மாறி ஆட்சியமைக்கத் திட்டமிட்டனர். ராஜினாமா செய்த எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் இதைத்தானே சொல்கிறார்கள்.

நான் முதல்வராகப் பல இடங்களுக்கு ஆய்வுக்குச் செல்கிறேன். ஒரு பாலத்திற்கு ஆய்வுக்குச் சென்றால், 'நாங்கள் கட்டிய பாலத்தில் ஏறி விஜய் என்ன ஷூட்டிங் எடுக்கிறாரா?' என்று கேட்கிறார்கள். நீங்கள் கொடுத்த பணத்திலா பாலத்தைக் கட்டினீர்கள்? முதலமைச்சர் என்றால் முதலாளி அல்ல, மக்களின் வேலைக்காரர்கள்.

தவெக அரசும் கடன்தான் வாங்குகிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள். தவெக அரசு கடன் வாங்குகிறது, ஆனால் அது தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்காகத்தானே தவிர, கொள்ளையடிப்பதற்காக அல்ல. திமுகவும் பாஜகவும் வேறு வேறு இல்லை. டெல்லியில் இருக்கும் பாஜகவுக்குப் பெயர் திமுக, தமிழ்நாட்டில் இருக்கும் திமுகவுக்குப் பெயர் பாஜக!

வாக்குறுதிகள் குறித்து மக்களைக் கேள்வி கேட்கச் சொல்கிறார்கள். ஆனால் மக்களோ 'நம்ம வீட்டுப் பிள்ளை விஜய் கொடுப்பார்' என்று அவர்களிடம் கரியைப் பூசி அனுப்புகிறார்கள். பால் கொள்முதல் விலையை 5 ஆண்டுகளில் உயர்த்துவோம் என்று வாக்குறுதி அளித்து, ஆட்சிக்கு வந்த 3 மாதங்களிலேயே அதனை நிறைவேற்றியிருக்கிறோம்.

cmviyaj4i.jpg

தீய சக்தியான திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சில தலைவர்கள் முயன்றதால் ஏற்பட்ட மனவேதனையைத் தாங்க முடியாமல்தான் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்தனர்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு எப்படி திமுக எதிரியோ, அதேபோல் நம்ம தவெகவுக்கும் திமுகதான் முதன்மை எதிரி. எம்.ஜி.ஆரின் உண்மைத் தொண்டர்களே, கவலைப்படாதீர்கள், உங்களுக்கு நான் இருக்கிறேன்! தொகுதி மறுவரையறை வந்துவிட்டால் மத்திய அரசுடன் கூட்டணி வைக்கத் திமுக துடித்துக் கொண்டிருக்கிறது" என முதலமைச்சர் விஜய் பேசினார்.