அஞ்சுகிராமம் அருகே வேலை செய்த வீட்டின் பீரோவை திறந்து 12¼ பவுன் நகை மற்றும் ரூ.65,500 ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்ற பணிப்பெண் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது கணவரைப் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த மாணிக்கத்தின் மனைவி பாக்கியபாலா (63). இவரது மகள்கள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், பேரக்குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காகத் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த முத்துஷபியா (47) என்பவரை தனியார் அறக்கட்டளை வாயிலாகப் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணிப்பெண்ணாகச் சேர்த்துள்ளார்.

இந்நிலையில், பாக்கியபாலா கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வங்கியில் அடமானத்திலிருந்து மீட்ட 12¼ பவுன் நகைகள் மற்றும் ரூ.65,500 பணத்தைச் தனது வீட்டு பீரோவில் பூட்டி வைத்துள்ளார். கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி பீரோவைத் திறந்து பார்த்தபோது, அதில் இருந்த நகையும் பணமும் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தடய அறிவியல் மற்றும் விரல்ரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்ததில், நகை திருடுபோன பீரோவில் பணிப்பெண் முத்துஷபியாவின் கைரேகை பதிவாகியிருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி காலை ரத்தப் பரிசோதனைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற முத்துஷபியா, அஞ்சுகிராமத்தில் உள்ள உணவகம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவரிடம் ஒரு பையை ஒப்படைத்தது கண்டறியப்பட்டது.

அவ்வாகனத்தின் எண்ணை வைத்து ஆய்வு செய்ததில், அது காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஹசன் என்ப என்பதும், அவர் முத்துஷபியாவின் கணவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அஞ்சுகிராமம் காவல் ஆய்வாளர் செல்வி தலைமையிலான கன்னியாகுமரி உட்கோட்டத் தனிப்படையினர் காயல்பட்டினம் சென்று ஹசனைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மனைவி முத்துஷபியா திருடிக் கொடுத்த 12¼ பவுன் நகைகள் மற்றும் பணத்தைப் பெற்றுக்கொண்டதை அவர் ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து முத்துஷபியா மற்றும் அவரது கணவர் ஹசன் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து, நகைகளையும் பணத்தையும் மீட்டனர்.

புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளைக் கைது செய்த அஞ்சுகிராமம் காவல் ஆய்வாளர் செல்வி, உதவி ஆய்வாளர் பிரியராஜ்குமார் மற்றும் உட்கோட்டத் தனிப்படையினரைக் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டினார்.