நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணிபுரிந்து வருபவர் சொர்ணராஜ். இவர் மேலக்கருங்குளம் சோதனைச்சாவடியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரைத் தடுத்து நிறுத்தி ஆவணங்களைச் சரிபார்த்தனர். இதில் அவரது வாகனத்திற்குச் சரியான காப்பீடு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அங்கிருந்த உயர் அதிகாரி, அந்த நபருக்கு அறிவுரை வழங்கி உடனடியாகக் காப்பீடு செய்யுமாறு கூறி அனுப்பி வைத்துள்ளார். இருப்பினும், ஏட்டு சொர்ணராஜ் அந்த நபரிடம் தனியாகச் சென்று, கையில் பணம் ஏதேனும் இருந்தால் கொடுத்துவிட்டுச் செல்லுமாறு கேட்டுள்ளார்.
அதற்கு அந்த நபர், "கையில் ரொக்கம் இல்லை, ஜி-பே மூலம் அனுப்புகிறேன்" எனக் கூறி எண் கேட்டுள்ளார். உடனே ஏட்டு சொர்ணராஜ் ஒரு செல்போன் எண்ணைக் கொடுத்து, அதற்குப் பணத்தை அனுப்புமாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து அந்த நபர், "பணம் வந்துவிட்டதா?" எனக் கேட்க, ஏட்டு சொர்ணராஜ் "இன்னும் பணம் வரவில்லை" என்று கூறும் உரையாடலின் ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாகப் பரவியது.
இந்த விவகாரம் நெல்லை மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய்யின் கவனத்திற்குச் சென்றது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட ஆணையர், துறை ரீதியான நடவடிக்கை எடுத்து ஏட்டு சொர்ணராஜை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் காவல் துறையினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

