வியட்நாம் நாட்டின் நஹாடிராங் நகரில் நடைபெற்ற 73-ஆவது உலக அழகிப் போட்டியில், உலகெங்கிலும் உள்ள 40 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளின் முடிவில் எரித்திரியாவின் ஸ்னிட் ஹப்தியாப், ஸ்பெயினின் எலிசபெத் ரெயின்ஸ், மலேசியாவின் தானுசியா செட்டி, வியட்நாமின் லெ கியூவென் பாவோ ங்கோக், டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ரொமாண்டா ஹொம்பிர் ஆகிய 6 பேர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

இறுதிப்போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹெய்ரி மோலா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவருக்குக் கடந்த ஆண்டின் உலக அழகியான தாய்லாந்தின் ஓபல் சுஷாதா சுவாங்ஸ்ரீ மகுடம் சூட்டினார்.

வெற்றி பெற்ற ஜோஹெய்ரி மோலா பள்ளி ஒன்றில் இலக்கியம் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியையாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கல்வி, சமூகப் பணி மற்றும் கதை சொல்லும் திறன் ஆகியவற்றைப் பாராட்டி போட்டி அமைப்பு கவுரவித்துள்ளது.

இப்போட்டியில் ஸ்பெயின் நாட்டின் எலிசபெத் 2-ஆம் இடத்தையும், மலேசியாவின் தானுசியா செட்டி 3-ஆம் இடத்தையும் பிடித்தனர். இந்தியாவின் சார்பில் பங்கேற்ற நிகிதா போர்வால் முதல் 40 இடங்களுக்குள் முன்னேறி, பின்னர் வெளியேறினார்.

கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஒரு பெண், 44 ஆண்டுகளுக்குப் பிறகு உலக அழகிப் பட்டத்தைக் கைப்பற்றுவது இதுவே முதல்முறையாகும்.